“நீட் எதிர்ப்பு பேரணிக்கு அனுமதி, பாஜக யாத்திரைக்கு அனுமதி மறுப்பதா?” - பாஜக மாநில துணைத்தலைவர் நாகராஜன்
சென்னையில் நீட் எதிர்ப்பு குறித்து மாணவர் பேரணிக்கு அனுமதி, அதே சமயம்
மக்கள் பிரச்னைக்கான யாத்திரைக்கு அனுமதி மறுப்பதா என பாஜக மாநில துணைத்தலைவர் கரு நாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் வரும் 11 ஆம் தேதி பாஜக தேசிய தலைவர் நட்டா பங்கேற்கும், ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி வெப்பேரியில் உள்ள சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் காவல் ஆணையரை சந்தித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
‘என் மண் என் மக்கள்’ யாத்திரை 190 ஆவது தொகுதியை நிறைவு செய்யும் நிலையில், எங்கள் மாநில தலைவர் மக்களை நேரடியாக மக்களை சந்தித்து வருகிறார். சென்னையில் அகில பாரத தலைவர் நட்டா வருகையை முன்னிட்டு, அனுமதி கேட்டு இருந்தோம். அதிகாரிகளை சந்தித்தோம். சுமார் 1 மணி நேரமாக காத்திருக்க செய்தும், இந்த யாத்திரைக்கு அனுமதி வழங்க முடியாது என சொல்கிறார்கள்.
ஆனால் கடந்த 1 ஆம் தேதி நீட் எதிர்ப்பு பேரணி என்ற பேரில், பேருந்து மூலம் 1000 மாணவர்களை அழைத்து வந்து ராயபுரத்தில் பேரணி நடத்தினார்கள். கிளாம்பக்கம்
செல்ல அரசு பேருந்து இல்லை என பல இடங்களில் சொல்லி கொண்டிருக்கும் பொழுது,
எப்படி இதற்கு மட்டும் பேருந்து கொடுக்கப்படுகிறது?. அதே போல வாலாஜா சாலையில் வருடத்திற்கு 25 முறை பலர் பிறந்தநாளுக்கு ஊர்வலம் செல்கிறார்கள். எங்களுக்கு அந்த இடத்திலாவது அனுமதி கொடுங்கள் என கேட்டோம். ஆனால் அதையும் அதிகாரிகள் ஏற்க தயாராக இல்லை.
சென்னை பச்சையப்பன் கல்லூரி அருகே பொதுக்கூட்டம் நடத்த எங்களுக்கு அனுமதி கொடுப்பதாகவும், பாதுகாப்பு கொடுப்பதாக மட்டுமே ஒப்புக்கொண்டார்கள். எங்கள் யாத்திரை ஒன்றும் வெறும் சமாதிக்கு செல்லும் ஊர்வலம் இல்லை. மக்கள் பிரச்னையை குறித்த யாத்திரை தான் இது. எங்களுக்கு அனுமதி வழங்கவில்லை என்றால், அடுத்ததாக தேவைபட்டால் நீதிமன்றத்தை நாடுவோம். தமிழ்நாட்டில் இதுவரை பார்த்திராத
வகையிலான மாநாடு திருப்பூரில் நடைபெறும். அந்த கூட்டத்தில் கூட்டணி கட்சிகளும் பங்கேற்று அதன் தலைவர்களும் மேடை ஏறுவார்கள்.
வரும் 11 ஆம் தேதி சில கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் சென்னையில் நடைபெறும் கூட்டத்தில் பேசுவார்கள். போரூர் - பூந்தமல்லி சாலையில் பாஜகவின் சுவர் விளம்பரங்களை மர்ம நபர்கள் சேதப்படுத்துவது தொடர்பான புகார் எங்களுக்கு வந்திருக்கிறது. அது திமுகவினரின் வயிற்றெரிச்சல் செய்யக்கூடிய வேலைதான். காவல்துறையிடம் இதுகுறித்து புகார் கொடுக்கப்படும் என தெரிவித்தார்.