"சாதி தெரியாதவர்கள்..." என சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அனுராக் தாக்கூர் | ராகுல் காந்தி பதிலடி!
சாதி குறித்து பாஜக எம்.பி. அனுராக் தாகூர் பேசியது பெரும் சர்ச்சையான நிலையில், அதற்கு ராகுல் காந்தி பதிலடி தந்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சாதிவாரி கணக்கெடுப்பிற்கு எதிராக உள்ள வேளையில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனக் கூறி வருகிறது. இந்தியா கூட்டணியின் மக்களவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில், ஆட்சிக்கு வந்தால் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவோம் என குறிப்பிடப்பட்டிருந்தது.
அதேவேளையில், பட்ஜெட் மீதான உரையில் பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நாடு முழுவதும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்றும், இந்தியா கூட்டணி இதில் உறுதியாக உள்ளதாகவும் கூறி இருந்தார். இந்நிலையில் சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக மத்திய அமைச்சர் அனுராக் தாகூருக்கும், மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்திக்கும் இடையில் கடும் மோதல் ஏற்பட்டது.
இந்நிலையில் மக்களவையில் பேசிய பாஜக எம்.பி. அனுராக் தாக்கூர், "சாதி தெரியாதவர்கள் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேசுகிறார்கள். இந்த அவையிலேயே முன்னாள் பிரதமர் ஆர்ஜி-1 (ராஜீவ் காந்தி) ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை எதிர்த்ததை சபாநாயகருக்கு நினைவூட்ட விரும்புகிறேன்" என்று கூறியது அவையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.