Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத் தேர்தலா..? - தயாராகும் தமிழ்நாடு..!

10:31 AM Jan 24, 2024 IST | Web Editor
Advertisement

தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் அதற்கான தீவிர களப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அது குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்...

Advertisement

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் பதவிக்காலம் வரும் ஜூன் மாதத்துடன் நிறைவடைய உள்ளது. அதன் காரணமாக ஏப்ரல் மாதமே நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனடிப்படையில் அனைத்துக் கட்சிகளும் தேர்தல் களப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக ஆளும் கட்சியான திமுக, நாடாளுமன்ற தேர்தலுக்கான ஒருங்கிணைப்புக் குழு, அறிக்கை தயாரிப்புக் குழு மற்றும் கூட்டணி கட்சிகளுடனான பேச்சுவார்த்தைக்கு தனிக்குழு என 3 குழுக்களை நியமித்து அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

அண்மையில் சேலத்தில் இளைஞரணி மாநாட்டை நடத்திய திமுக, அதன் தொடர்ச்சியாக நாடாளுமன்ற தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவின் முதல் கூட்டத்தையும் நடத்தி முடித்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி நடந்த இந்த கூட்டத்தில், நாடாளுமன்ற தொகுதி நிர்வாகிகளான பொறுப்பு அமைச்சர்கள், மாவட்ட, ஒன்றிய மற்றும் பேரூராட்சி நிர்வாகிகளுடன் சந்திப்பு நடத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அதன்படி முதற்கட்டமாக 24ம் தேதி தொடங்கி பிப்ரவரி 5ம் தேதி வரை 40 தொகுதிகளிலும் உள்ள நாடாளுமன்ற தேர்தல் நிர்வாகிகளுடன் சந்திப்பு நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்கட்சியான அதிமுக-வும் தேர்தல் பணிகளில் மும்முரம் காட்டி வருவதை எடுத்துரைக்கும் விதமாக, நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை, பிரசாரம், விளம்பரம் என அனைத்துப் பணிகளையும் மேற்கொள்ள தனித் தனியே குழுக்களை அமைத்துள்ளது. இதற்கான அறிவிப்பை கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ் வெளியிட்ட நிலையில், பாஜக கூட்டணியை விட்டு வெளியேறிய அதிமுக நாடாளுமன்றத் தேர்தலில் தனிக் கூட்டணியை ஏற்படுத்தி போட்டியிடும் என கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.

திராவிடக் கட்சிகளுக்கு போட்டியாக களமிறங்கவுள்ள தமிழ்நாடு பாஜக-வும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள பல்வேறு வியூகங்களை வகுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக தமிழ்நாடு பாஜக-வில் நாடாளுமன்ற தொகுதி மற்றும் சட்டமன்ற தொகுதிகளுக்கு பார்வையாளர்களையும், பொறுப்பாளர்களையும் கட்சித் தலைமை நியமித்துள்ளது. அத்துடன் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் பணிகளை, விரைந்து தொடங்குமாறு மாநில தலைமைக்கு, தேசிய தலைமை உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிகிறது. அதனடிப்படையில், தொகுதி வாரியாக தேர்தலில் போட்டியிட தகுதியுள்ள 3 நபர்களை தேர்ந்தெடுத்து, பட்டியல் தயாரித்து தலைமை அலுவலகத்திற்கு அனுப்புமாறு மாநில தலைவர் அண்ணாமலைக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேபோல பாமக சார்பிலும் நாடாளுமன்ற தேர்தல் பணிகளைத் தொடங்க நிறுவனர் ராமதாஸ் மற்றும் கட்சியின் தலைவர் அன்புமணி ஆகியோர் உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. அதனடிப்படையில் மாவட்ட வாரியாக செயற்குழுக் கூட்டங்களை நடத்தி, பூத் கமிட்டி அமைத்தல் உள்ளிட்ட தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனைகளை நடத்தி வருகின்றனர். திமுகவுடன் கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பிலும், திருச்சியில் வரும் 26ம் தேதி வெல்லும் ஜனநாயகம் என்ற தலைப்பில் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. திருமாவளவன் தலைமையில் நடக்கவுள்ள இந்த மாநாட்டில் முதலமைச்சர் முக ஸ்டாலின் உள்ளிட்ட INDIA கூட்டணி தலைவர்கள் பங்கேற்பார்கள் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதேபோல நாடாளுமன்ற தேர்தல் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வரும் மக்கள் நீதி மையம் கட்சியும், கூட்டணி பேச்சுவார்த்தைகளுக்கு தயாராகி வருகிறது. குறிப்பாக கூட்டணியில் இணைய 2 முக்கிய நிபந்தனைகளையும் அக்கட்சியின் தலைவர் கமலஹாசன் வகுத்துள்ளார். இது தொடர்பாக மநீம வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டின் வளர்ச்சியிலும், தமிழக மக்களின் நலனிலும் எந்த சமரசமும் அனுமதிக்கப்பட மாட்டாது எனவும், கமல்ஹாசனின் சிந்தனைகளோடும், கொள்கைகளோடும் ஒத்துப்போகிறவர்களுடன் மட்டுமே கூட்டணி வைப்போம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கள் 2 நிபந்தனைகளோடு யாரும் ஒத்துவராதபட்சத்தில், 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட தயங்க மாட்டோம் எனவும் அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.

விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் “நாம் தமிழர் கட்சி” தனித்து போட்டியிடுவது என்ற நிலைபாட்டை கொண்டுள்ளது. அந்த கட்சி போட்டியிட்ட அனைத்து சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களிலும் இதுவரை தனித்தே களம் கண்டுள்ளது. அதனை அக்கட்சியின் பலமாக கருதுவதால் இம்முறையும் தனித்து போட்டியிடுவதையே முடிவாக கொண்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகளை சீமான் ஏற்கனவே தொடங்கி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அனல் பறக்கும் தமிழ்நாடு தேர்தல் களத்தில், அரசியல் கட்சிகளின் ஒவ்வொரு முடிவுகளும், மக்கள் மத்தியில் என்ன மாதிரியான மாற்றங்களை கொண்டுவரப்போகிறது என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 

Tags :
#MMK2024 electionAIADMKBJPCongressDMKElectionGeneral ElkectionNTKPMKsdpiTN electionVCK
Advertisement
Next Article