“பஹல்காம் தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான்... முழு ஆதாரங்கள் உள்ளன” - மத்திய வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி!
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக, ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்திய ராணுவத்தினர் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய தடைசெய்யப்பட்ட அமைப்புகளுக்குச் சொந்தமான 9 பயங்கரவாத மறைவிடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தினர்.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி,
“பஹல்காம் தாக்குதல் என்பது இந்தியாவில் சமூக பிரிவினையை ஏற்படுத்துவதற்காக நடத்தப்பட்ட தாக்குதல். பாகிஸ்தானின் தீவிரவாத செயல்களை, தீவிரவாத ஊக்குவிப்பை தடுக்க ஐநா தவறிவிட்டது. பஹல்காம் தாக்குதல் மிகவும் கொடுமையான தாக்குதல். பஹல்காம் தாக்குதல் என்பது ஜம்மு காஷ்மீரில் நிலவிவரும் அமைதியை குலைப்பதற்கான தாக்குதலாகும்.
பஹல்காம் தாக்குதல் மூலம் பாகிஸ்தானின் தீவிரவாதம் மற்றும் தீவிரவாதிகளுக்கு உடனான தொடர்பு அம்பலப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தான் உலக தீவிரவாதத்திற்கு சொர்க்க பூமி. பஹல்காம் தீவிரவாத தாக்குதல் இந்தியாவை இது போன்ற நடவடிக்கையை எடுக்க வைத்துள்ளது. தற்போது நடத்தப்பட்ட இந்திய ராணுவத்தின் தாக்குதல் என்பது பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு எதிராக இந்தியா தொடுத்த பதில் தாக்குதல்.
தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் நிச்சயமாக நீதிக்கு முன்பு கொண்டு வரப்படுவார்கள். பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குததல் கொடூரமானது. இந்த தாக்குதலில் காட்டுமிராண்டித்தனம் வெளிப்பட்டுள்ளது. தற்போது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல் தீவிரவாத முகாம்கள் மற்றும் தீவிரவாதத்தை குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதலே. உலகில் உள்ள அனைத்து தீவிரவாதிகளும் பாகிஸ்தானில் தான் இருக்கின்றனர். அந்த மண்தான் அவர்களுக்கு சொர்க்கம்.
பஹல்காம் தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு உள்ளது என்பதற்கான தெளிவுகள் மற்றும் ஆதாரங்கள் உள்ளன. தீவிரவாத கட்டமைப்புகள் தீவிரவாத முகாம்களை குறி வைத்தே இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது. தீவிரவாதத்தை ஊக்குவிப்பவர்கள், தீவிரவாதத்திற்கு பணம் கொடுப்பவர்கள், தீவிரவாதத்திற்கு துணை போகுபவர்கள் அனைவரும் நீதியின் முன் கொண்டு வரப்பட வேண்டும்.
இந்தியா தற்போது எடுத்த நடவடிக்கை என்பது மிகைப்படுத்தப்பட்ட நடவடிக்கை அல்ல. இந்திய ராணுவம் எடுத்த நடவடிக்கை என்பது துல்லியமாக திட்டமிட்டு எடுக்கப்பட்ட தீவிரவாத தடுப்பு நடவடிக்கை” என தெரிவித்தார்.