For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மத்திய பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு: "நிதி ஆயோக் கூட்டத்தை காங். முதலமைச்சர்கள் புறக்கணிப்பார்கள்" - கே.சி.வேணுகோபால் அறிவிப்பு!

09:38 PM Jul 23, 2024 IST | Web Editor
மத்திய பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு   நிதி ஆயோக் கூட்டத்தை காங்  முதலமைச்சர்கள் புறக்கணிப்பார்கள்    கே சி வேணுகோபால் அறிவிப்பு
Advertisement

பாஜக ஆட்சியின் உண்மையான, பாரபட்சமான நிறங்களை மறைக்க வடிவமைக்கப்பட்ட நிதி ஆயோக் கூட்டத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முதலமைச்சர்கள் புறக்கணிக்கவுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

Advertisement

இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடந்ததால் இடைக்கால பட்ஜெட் மட்டும் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்வதில் அரசு மும்முரம் காட்டிய நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. ஆகஸ்ட் 12-ம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடைபெற உள்ள நிலையில் முக்கிய நிகழ்வான பட்ஜெட் தாக்கல் இன்று (ஜூலை 23) நடைபெற்றது.

கடந்த காலங்களில் அனைத்து பட்ஜெட்டையும் பாஜக தனி பெரும்பான்மை பலத்துடன் தாக்கல் செய்த நிலையில் முதன்முறையாக பாஜக தலைமையிலான கூட்டணி அரசு மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 7வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார்.

மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டு உள்ளதாகவும், இது தமிழ்நாட்டிற்கு இழைக்கப்படும் மாபெரும் துரோகம் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். அதேபோல், தமிழ்நாட்டிற்கு எந்தவிதமான புதிய திட்டங்களும் அறிவிக்கப்படாதது பெருத்த ஏமாற்றத்தை அளிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் மத்திய பட்ஜெட்டுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் ஜூலை 27-ம் தேதி நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தை காங்கிரஸ் கட்சியினர் புறக்கணிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் (எக்ஸ்) வெளியிட்டுள்ள பதிவில்,

“இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் மிகவும் பாரபட்சமானது மற்றும் ஆபத்தானது. இது மத்திய அரசு பின்பற்ற வேண்டிய கூட்டாட்சி மற்றும் நேர்மை கொள்கைகளுக்கு முற்றிலும் எதிரானது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஜூலை 27-ம் தேதி நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தை இந்திய தேசிய காங்கிரஸ் முதலமைச்சர்கள் புறக்கணிக்க உள்ளனர். இந்த அரசாங்கத்தின் அணுகுமுறை அரசியலமைப்புச் சட்டங்களுக்கு முற்றிலும் எதிரானது. பாஜக ஆட்சியின் உண்மையான, பாரபட்சமான நிறங்களை மறைக்க மட்டுமே வடிவமைக்கப்பட்ட ஒரு நிகழ்வில் நாங்கள் பங்கேற்க மாட்டோம்”

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement