எதிர்க்கட்சிகள் அமளி - நாடாளுமன்ற இரு அவைகளும் நாளை காலை வரை ஒத்திவைப்பு!
எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாளை காலை 11 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவ. 25 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதானி மீதான அமெரிக்க நீதிமன்றத்தின் குற்றச்சாட்டு விவகாரத்தைக் கொண்டு எதிர்க்கட்சிகள் தினமும் போராட்டத்தில் ஈடுபட்டதாலும், அவையில் முழக்கமிட்டதாலும் அவை நடவடிக்கைகள் முடங்கின.
இதனிடையே நேற்று முன்தினம் மாநிலங்களவையில அரசியல் சாசனம் மீதான விவாதத்தின் போது பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, “’அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர் என கூறுவதற்கு பதிலாக கடவுளின் பெயரை உச்சரித்திருந்தாலாவது ஏழு ஜென்மத்திற்கும் சொர்க்கத்தில் இடம் கிடைத்திருக்கும்” எனக் கூறினார். அமித்ஷாவின் இந்த கருத்து அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் இருப்பதாக கூறி எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
மேலும் இரண்டு நாட்களாக அமித்ஷாவை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உள்துறை அமைச்சர் பதவியில் இருந்து உடனடியாக அமித்ஷா விலக வேண்டும் என்றும், மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் எம்.பி.க்கள் முழக்கமிட்டனர்.
அவையிலும் இதனை வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் இன்றும் அவை நடவடிக்கைகள் முடங்கின. மேலும் நாளை காலை 11 மணிவரை நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனிடையே காங்கிரஸுக்கு போட்டியாக, பாஜக உறுப்பினர்களும் கையில் பதாகைகளை ஏந்தி நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் மேற்கொண்டனர்.
இருதரப்பு எம்பிக்களுக்குமான போராட்டம் தள்ளுமுள்ளாக மாறியதில் பாஜக எம்பி பிரதாப் சாரங்கி மண்டை உடைப்பட்டது. ராகுல் காந்திதான் தன்னை தள்ளிவிட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். காயமடைந்த பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பிரதாப் சாரங்கி சார்பாக, ராகுல் காந்தி மீது நாடாளுமன்ற வீதி காவல் நிலையத்தில் பாஜக எம்பிக்கள் புகார் அளித்துள்ளனர்.