சேப்பாக்கம் மைதானத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்… சென்னையில் பரபரப்பு!
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தான் இருப்பதாக சந்தேகித்த இந்தியா, பாகிஸ்தான் உடனான உறவை இந்தியா முற்றிலுமாக துண்டித்தது. குறிப்பாக, வான்பரப்பு மூடல், சிந்துநதி ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது.
இந்த சூழலில், கடந்த 7ம் தேதி நள்ளிரவு 1.44 மணியளவில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. மொத்தம் 9 இடங்களில் (சகாம்ரு, முரித்கி, கோட்லி, சியால்கோட், குல்பூர், பிம்பர், பஹவல்பூர்) பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்று பெயரிடப்பட்டது.
இதனையடுத்து இருநாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வந்தன. இதற்கிடையே, கடந்த 9ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு குறுஞ்செய்தி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இத்ந நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தினர் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில், போலீசார் மோப்பநாய் உடன் சேப்பாக்கம் மைதானத்தில் சோதனை நடத்தி வருகின்றனர். சேப்பாக்கம் மைதானத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.