For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“நீட் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை" - பிரதமர் மோடி உறுதி!

02:57 PM Jul 03, 2024 IST | Web Editor
“நீட் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை    பிரதமர் மோடி உறுதி
Advertisement

“நீட் வினாத்தாள் கசிவு முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

Advertisement

18-வது மக்களவை கூட்டத் தொடர் கடந்த ஜூன் 24-ம் தேதி கூடிய நிலையில்,  கடந்த 27-ம் தேதி நாடாளுமன்றத்தின் இரு அவையின் கூட்டு கூட்டத் தொடரிலும் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு கலந்து கொண்டு உரையாற்றினார். தொடர்ந்து ஜூலை 1ஆம் தேதி குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு உரையாற்றினார். இதையடுத்து நேற்று பிரதமர் மோடி பதிலுரையாற்றினார். அதன் பிறகு மக்களவை நாள் குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இதையடுத்து இன்று மாநிலங்களவையில் பிரதமர் மோடி பதில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

கடந்த இரண்டரை நாட்களில், சுமார் 70 எம்.பி.க்கள் குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தில் பங்கேற்றனர். அதற்காக எம்.பி.க்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். சுதந்திர இந்தியா மற்றும் நாடாளுமன்றப் பயண வரலாற்றில், 60 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக 3-வது முறையாக ஒரு அரசாங்கம் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. இது ஒரு சாதாரண விஷயம் அல்ல என்பதை நான் உணர்கிறேன்.

காங்கிரஸ் கட்சியில் உள்ள எனது நண்பர்களுக்கு நன்றி. 1/3 அரசாங்கம் என்று காங்கிரஸ் கட்சியின் கூறியது சரி தான். நாங்கள் ஏற்கனவே 10 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளோம். இன்னும் 20 ஆண்டுகள் நாங்கள் ஆட்சி அமைப்போம். இதனை உறுதியாக நம்புகிறேன்.
அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டு 75 ஆண்டுகள் ஆகிறது. நான் ஒரு சாதாரண குடும்பத்தை சேர்ந்தவன். என் குடும்பத்தை சேர்ந்த ஒருவர் கூட பஞ்சாயத்து தலைவர் ஆனது இல்லை. ஆனால் இன்று பல்வேறு பெரிய பெரிய பதவிகளில் இருந்து நாட்டுக்கு சேவையாற்றி வருகிறேன். இதற்கு காரணம் பாபாசாகேப் அம்பேத்கர் அளித்துள்ள அரசியலமைப்பு சட்டம் தான் காரணம்.

கடந்த 10 ஆண்டுகள் நாங்கள் செய்தது எல்லாம் வெறும் பசியை தூண்டும் செயல் தான். பிரதான உணவு என்பது இனி தான் வர உள்ளது. அடுத்து வரும் 5 ஆண்டுகள் எங்களின் போராட்டம் என்பது ஏழ்மையை அகற்றும் வகையில் இருக்கும். அடுத்த 5 ஆண்டுகளில் அரசு நிர்வாகத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்வோம்” எனக் கூறினார்.

இதற்கிடையே பேச மல்லிகார்ஜுனே கார்கே பேச அனுமதி கோரப்பட்டது. ஆனால் அதற்கு அனுமதி தரவில்லை. இதனையடுத்து பொய் பேசுவதை நிறுத்துங்கள் எனக்கூறி எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.

தொடர்ந்து பேசிய மோடி,  நீட் தேர்வு வினாத்தாள் கசிவை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றன. தங்கள் அரசியல் ஆதாயத்திற்காக இளைஞர்களின் எதிர்காலத்தில் விளையாடுகின்றனர். வினாத்தாள் கசிவு முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார். இதனையடுத்து நாடாளுமன்ற மாநிலங்களவையும் இன்றுடன் நிறைவு பெறுவதாக  தலைவர் ஜெகதீப் தன்கர் அறிவித்தார். 

Tags :
Advertisement