சாவர்க்கர் குறித்த கருத்து.. ராகுல் காந்தி - ஸ்ரீகாந்த் ஷிண்டே இடையே கடுமையான விவாதம்!
மக்களவையில் இன்று, அரசமைப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு நடைபெற்ற விவாதத்தில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், சிவசேனை எம்.பி. ஸ்ரீகாந்த் ஏக்நாத் ஷிண்டே இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
மக்களவையில் ராகுல் காந்தி பேசுகையில், “அரசியலமைப்பு மற்றும் இந்தியர்கள் பற்றி மாற்று கருத்து கொண்டிருப்பதை சாவர்க்கரே எழுதியிருந்தார். வேதத்திற்கு அடுத்ததாக வணங்க வேண்டியது மனுஸ்மிருதி என்று சாவர்க்கர் கூறியிருந்தார். உங்கள் தலைவரின் வார்த்தையை நீங்கள் (பாஜக) ஆதரிக்கிறீர்களா?
தற்போது அரசமைப்பைப் பாதுப்போம் என்று நீங்கள் சொல்வது சாவர்க்கரை அவமதிப்பதாகும். நாட்டில் உள்ள பல்வேறு தலைவர்களை புகழ தயங்குகிறது பாஜக. பெரியார், அம்பேத்கர், காந்தி என அனைத்து தலைவர்களையும் நாங்கள் வணங்குகிறோம். அரசமைப்பைப் பற்றி சாவர்க்கர் கூறுகையில், இந்திய அரசமைப்பு என்பது, இந்தியர்களைப் பற்றிய எதையும் கொண்டிருக்காத ஒன்று என்றும் மனுஸ்மிருதி என்பது வேதங்களுக்குப் பிறகு மிகவும் வணங்கப்படக்கூடிய ஒன்றாகும்.
மேலும் இது பண்டைய காலங்களிலிருந்து நமது கலாசாரம், பழக்கவழக்கங்கள், சிந்தனைகள் மற்றும் நடைமுறைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது என்று சாவர்க்கர் கூறினார். மேலும், எவ்வாறு ஏகலைவனின் கட்டை விரல் துண்டிக்கப்பட்டதோ அதுபோல மத்திய அரசு, நாட்டின் பல்வேறு துறைகளை ஒரு சில தொழிலதிபர்களுக்குக் கொடுத்துவிட்டு அனைத்து இளைஞர்களின் கட்டைவிரலையும் துண்டித்துவிட்டது” என்று குற்றம்சாட்டியிருந்தார்.
இந்நிலையில், சிவசேனைக் கட்சியைச் சேர்ந்த கல்யாண் தொகுதி எம்.பி. ஸ்ரீகாந்த் பேசுகையில், அவசரநிலை காலத்தில் அம்பேத்கர் மற்றும் பல தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, வி.டி. சாவர்க்கரை புகழ்ந்து எழுதிய கடிதத்தையும் அவர் மேற்கோள்காட்டிப் பேசினார். நாட்டின் வீரம் மிக்க மகன் என்று இந்திரா காந்தி, சாவர்க்கர் குறித்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததையும் ஸ்ரீகாந்த் சுட்டிக்காட்டிப் பேசினார்.
மேலும், சவார்க்கரைப் புகழ்ந்து பேசியதன் மூலம், உங்கள் பாட்டி, இந்திரா காந்தி, அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானவரா? இந்த நாட்டுக்காக அவர் செய்த தியாகத்துக்குத்தான் அவரைப் பெருமைகொள்கிறோம் என்று பதிலளித்துள்ளார். இதற்கு ராகுல் பதிலளிக்க முயற்சித்தார். ஆனால், அதற்கு அனுமதி வழங்கப்படாததால், காங்கிரஸ் எம்.பி.க்கள் ராகுல் பேச அனுமதிக்கப்பட வேண்டும் என முழங்கினர்.
பிறகு பேசிய ராகுல், சாவர்க்கர் குறித்து இந்திரா காந்தியிடம் நான் கேட்டிருக்கிறேன். அதற்கு அவர் பதிலளிக்கையில், சாவர்க்கர் பிரிட்டிஷ்காரர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார், காந்தி சிறைக்குச் சென்றார், நேரு சிறைக்குச் சென்றார், ஆனால் சாவர்க்கர் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார் என்று பதிலளித்ததாக ராகுல் கூறினார்.
ஏகலைவா குறித்து ராகுல் பேசியதற்கு ஸ்ரீகாந்த் பதிலளிக்கையில், இந்த அரசமைப்பு சக்திதான், 400 ஆக இருந்த காங்கிரஸ் கட்சியை 40 ஆக மாற்றியிருக்கிறது. மகாராஷ்டிரத்திலும் எதிர்க்கட்சி அந்தஸ்து கோர முடியாத நிலையில் உள்ளது. உங்களது 50 ஆண்டு கால ஆட்சியில் இளைஞர்களுக்காக எதையும் செய்யவில்லை என்றும் கூறினார்.