கூட்டணிக்கான கதவுகள் மட்டுமல்ல, ஜன்னல்களும் திறந்துள்ளன - அண்ணாமலை!
கூட்டணி தொடர்பாக பாஜகவின் கதவுகள் மட்டுமல்ல ஐன்னலும் திறந்துள்ளதாகவும், அடுத்த இரண்டு மூன்று நாட்களில் தமிழ்நாட்டின் முக்கிய புள்ளிகள் பாஜகவில் இணைய உள்ளதாகவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள தமிழ்நாடு பாஜக தலைமையகமான கமலாலயத்தில், ஊடகப் பிரிவின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மத்திய பெட்ரோலியம் மற்றும் எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர். நாடாளுமன்ற தேர்தல் பரப்புரைகளில், ஊடகப்பிரிவின் முக்கியத்துவம் குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்யப்பட்டது.
இந்த ஆலோசனை கூட்டம் நிறைவுற்ற பின், அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
“காங்கிரஸ் ஆட்சி செய்த 10 ஆண்டுகளுக்கும், பாஜக ஆட்சி செய்துவரும் 10 ஆண்டுகளுக்கும் எவ்வளவு செய்திருக்கிறோம் என ஒப்பிட்டு பார்த்தால் வித்தியாசம் தெரியும். கடந்த 2 ஆண்டுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைத்தது உலகிலேயே இந்தியா மட்டும் தான். 2021-ம் ஆண்டு பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.5 குறைப்போம் என்று தேர்தல் அறிக்கையில் கூறிய திமுக தற்போது வரை குறைக்கவில்லை. கோவையில் உள்ள பாஜக எம்எல்ஏ அலுவலகம், ISO தர சான்று பெற்றுள்ளது. இதுவே தமிழ்நாட்டில் ISO 9001-2015 தர சான்று பெற்ற ஒரே சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்.
வரும் பிப்.27-ம் தேதி பல்லடத்தில் என் மண் என் மக்கள் நிறைவு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பார். அந்த விழாவில் கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்பார்கள். பிப்.28-ம் தேதி பிரதமர் அலுவலகத்தில் இருந்து, மாநில அரசிற்கான நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அந்த நிகழ்ச்சி குறித்து அரசு அறிவிக்கும். நெடுஞ்சாலைகளில் யாருக்காவது விபத்து நடக்கும் போது, அவர்களை அழைத்து சென்று மருத்துவமனையில் அனுமதிக்கும் திட்டம் மத்திய அரசு கொண்டு வந்த திட்டம். ஆனால் இங்கே புது பெயரை வைத்து மாநில அரசு புதிய அறிவிப்பை போல வெளியிடுகிறார்கள். 2015-ம் ஆண்டு மண்வள அடையாள அட்டையை மத்திய அரசு கொண்டுவந்தது. அதனை பெயர் மாற்றம் செய்து மாநில அரசு அறிவித்துள்ளது.
இந்த பட்ஜெட்டில் ஒன்றுமே இல்லை. முதற்கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்காக மத்திய அரசு நிதி பங்களிப்பை வழங்கியுள்ளது. மெட்ரோ ரயில் திட்டங்களுக்காக பாஜக அரசு கொடுத்த நிதியை, தமிழ்நாடு அரசு முடித்துவிட்டது. தமிழ்நாட்டுக்கு வெள்ள நிவாரண நிதியாக, ரூ.450 கோடி வழங்கப்பட்டுள்ளது. மழை வெள்ள பாதிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ரூ.10 ஆயிரம் கூட கொடுக்கும் அளவிற்கு பணம் இருக்கிறது.
மத்திய அரசை பொறுத்தவரை விவசாய நிலங்கள் மூழ்கி இருந்தால், உயிர் உடைமை பிரச்னை இருந்தால் உதவி செய்வோம். கூட்டணி தொடர்பாக பாஜகவின் கதவுகள் மட்டுமல்ல ஐன்னலும் திறந்து தான் உள்ளது. அடுத்த இரண்டு மூன்று நாட்களில் தமிழ்நாட்டின் முக்கிய புள்ளிகள் பாஜகவில் இணைய உள்ளனர். மக்கள் அதிகாரம் அளித்த முக்கிய புள்ளிகள் பாஜகவில் இணைய உள்ளனர். பிரதமர் பல்லடம் வரும் போது, கூட்டணி கட்சி தலைவர்கள் மேடை ஏற உள்ளனர்.
சபாநாயகர் அப்பாவு பாஜக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பேச நேரம் கொடுப்பது இல்லை. அவர் நடுநிலையான சபாநாயகராக இருக்கிறாரா என்பது கேள்வி தான். பாஜக எம்எல்ஏ-க்களுக்கு சட்டப்பேரவையில் பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்படுவதில்லை. அமைச்சர்கள் பேசுவதற்கு முன்பு அப்பாவு பேசி விடுகிறார்.
பாஜக அரசின் திட்டங்கள் மக்களுக்கு சென்று சரியாக சேர்வதில்லை. குறிப்பாக ராணிப்பேட்டையில் மத்திய அரசின் திட்டங்கள் குறைவாகவே சென்றிருக்கிறது. கோவையில் கூட வானதி சீனிவாசன் தொகுதியில் ஒரு சட்டமன்ற உறுப்பினரே, கர்ப்பிணிப் பெண்களுக்கு கிடைக்க வேண்டிய மத்திய அரசின் நிதியை வாங்கி கொடுக்க வேண்டிய நிலை இருக்கிறது” இவ்வாறு அண்ணாமலை பேசினார்.