“என்டிஏ கூட்டணி சரியான பாதையில் செல்கிறது.. அதற்கு தமிழ்நாடு வாக்கு வங்கியே உதாரணம்...” - பிரதமர் மோடி உரை!
தேசிய ஜனநாயகக் கூட்டணி சரியான பாதையில் தான் சென்று கொண்டிருக்கிறது என்பதற்கு தமிழ்நாட்டில் பாஜகவுக்கு வாக்கு வங்கி அதிகரித்திருப்பதே உதாரணம் என நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இன்று (ஜூன் 7) ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக, தெலுங்கு தேசம், ஜேடியு, ஜேடிஎஸ் உட்பட கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளின் எம்பிக்களும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற குழு தலைவராக நரேந்திர மோடி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். இதனை ராஜ்நாத் சிங் முன்மொழிய அமித்ஷா வழிமொழிந்தார்.
தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
“நாங்கள் தோற்கவில்லை, தோற்கவும் மாட்டோம். தேசிய ஜனநாயக கூட்டணிக்குக் கிடைத்திருப்பது சாதாரண வெற்றியல்ல. நாங்கள் தோற்றுவிட்டதாக எதிர்க்கட்சிகள் ஒருமாயத் தோற்றத்தை ஏற்படுத்துகின்றன. கடந்த 4-ம் தேதிக்கு முன்பே, ஒரு சிறுவனிடம், யார் ஆட்சிக்கு வருவார்கள் என்று கேட்டால்கூட, அவர் தேசிய ஜனநாயக கூட்டணிதான் என்று சொல்வார்.
இந்த தேர்தலில் வென்ற எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கும் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 2014, 2019 மற்றும் 2024 தேர்தல்களிலும் காங்கிரஸ் பெற்ற வெற்றியை விட தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களில் வென்றுள்ளது.
நாடே முதன்மையானது. நாட்டின் வளர்ச்சியில் ஒருபோதும் சமரசம் செய்ய மாட்டேன், வாஜ்பாய், ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், பால் தாக்கரே போன்றவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வித்திட்டனர்.
தேர்தலுக்கு முன்பே, உருவான கூட்டணி, தேர்தலில் வெற்றிபெற்று, இப்படி ஒரு கூட்டணி ஆட்சியை அமைப்பது வரலாற்றிலேயே இதுதான் முதல் முறை. கடந்த 30 ஆண்டுகளில், தற்போது உருவான தேசிய ஜனநாயக கூட்டணியே வலிமையானது. அனைத்து விவகாரங்களிலும் ஒருமித்த முடிவை எட்டுவதே எங்கள் கூட்டணியின் நோக்கம்.
வருங்காலங்களில் தமிழ்நாட்டில் பாஜகவுக்கு சிறப்பான எதிர்காலம் இருப்பது கண்கூடாகத் தெரிகிறது. தமிழ்நாட்டில் இருந்து எம்.பி.க்கள் கிடைக்காத போதும், வாக்கு விகிதம் அதிகரித்திருக்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணி சரியான பாதையில் தான் சென்று கொண்டிருக்கிறது என்பதற்கு தமிழகத்தில் பாஜகவுக்கு வாக்கு வங்கி அதிகரித்திருப்பதே உதாரணம். தமிழ்நாட்டில் பாஜக கூட்டணிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி. கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களிலும் பாஜகவின் வாக்கு விகிதம் அதிகரித்திருக்கிறது.
அனைவருக்குமான ஆட்சியை நடத்துவது என்பதில் தேசிய ஜனநாயக கூட்டணி உறுதி பூண்டுள்ளது. அரசை நடத்துவதற்கு ஒருமித்த கருத்துதான் முக்கியம், பெரும்பான்மை அல்ல. அரசு எப்படி நடக்கிறது? எதனால் நடக்கிறது? என்பதெல்லாம் மக்களுக்கு இப்போதுதான் தெரிகிறது” என்று பிரதமர் மோடி பேசினார்.