டீக்கடையில் வடை சுட்டு வாக்கு சேகரித்த நாதக வேட்பாளர்!
நாம் தமிழர் கட்சி திருச்சி வேட்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷ் டீக்கடை ஒன்றில் வடை சுட்டு வாக்கு சேகரித்தார்.
மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
அந்த வகையில், நாம் தமிழர் கட்சி திருச்சி வேட்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷ் திருவானைக்காவல் கோயிலில் தனது பிரச்சாரத்தை தொடங்கினார். தொடர்ந்து அவர், சன்னதி தெரு பகுதிகள், வீடுகள் மற்றும் கடைகள் ஆகிய இடங்களுக்குச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் டீக்கடை ஒன்றில் வடை சுட்டு வாக்கு சேகரித்தார்.
வாக்கு சேகரிப்பின் போது வேட்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில், தங்களுக்கு முதல் தலைமுறை ஓட்டு மற்றும் இளைஞர்களின் ஓட்டு உள்ளது எனவும், பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் எனவும் அவர் தெரிவித்தார்.
திருச்சி நாடாளுமன்ற தொகுதி புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை, திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம், திருவெறும்பூர் உள்ளிட்ட ஆறு தொகுதிகளை உள்ளடக்கியது. இந்த தொகுதியில், அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள், சுயேட்சைகள் என மொத்தம் 38 பேர் போட்டியிடுகின்றனர்.