தமிழ்நாடு பாஜக தலைவரானார் நயினார் நாகேந்திரன்... அண்ணாமலை வாழ்த்து!
தமிழ்நாடு பாஜக புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டார். புதிய மாநிலத் தலைவராக பொறுப்பேற்று கொண்ட நயினார் நாகேந்திரனுக்கு கூட்டத்தில் சான்றிதழ் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு அடுத்தாண்டு தேர்தல் நடைபெற உள்ளது. வட மாநிலங்களில் ஆதிக்கம் செலுத்தும் பாஜக தமிழ்நாடு அளவில் பின்தங்கியே உள்ளது. நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கூட 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வென்றது. பாஜக ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. இதனால் சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் கால்பதிக்க பல்வேறு முயற்சிகளை பாஜக மேற்கொண்டு வருகிறது.
அதற்கு அடிப்படையாக திமுகவிற்கு எதிராக வலுவான கூட்டணி அமைத்து, 2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்க பாஜக திட்டமிட்டுள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான, கூட்டணியில் இருந்து விலகி சென்ற அதிமுகவை மீண்டும் கூட்டணிக்குள் கொண்டுவர, பாஜக முயற்சித்து வந்தது. அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமி இடையே ஏற்பட்ட விரிசலால் கூட்டணி உடைந்ததாக கூறப்பட்டது.
அதனை சரிசெய்து கூட்டணியை மீண்டும் கட்டமைக்க பாஜக முயற்சித்தது. ஆனால் எடப்பாடி பழனிசாமி அண்ணாமலை விவகாரத்தில் முரண்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிமுக, திமுக என அனைவரிடமும் நட்புடன் இருந்த நயினார் நாகேந்திரனை பாஜக மாநிலத் தலைவராக்க கட்சி தலைமை முடிவு செய்ததாக கூறப்பட்டது.
அதன்படியே பாஜக மாநிலத் தலைவர் போட்டிக்கு விதிமுறைகளுடன் விருப்ப மனு நேற்று விநியோகிக்கப்பட்டது. ஆனால் விதிமுறைகளில் நயினார் நாகேந்திரனுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டது. அவரை தவிர வேறு யாரும் விருப்ப மனு கொடுக்கவில்லை. இதனைத்தொடர்ந்து இன்று பாஜக மாநிலத் தலைவர் யார் என்று அதிகாரப்பூர்வமாக கூறப்படும் என கூறப்பட்டிருந்தது. அதன்படி இன்று பாஜக புதிய மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவருக்கு முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் நடைபெற்ற இந்த அறிவிப்பு விழாவில் பாஜக தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர். இதற்கிடையே நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்தார்.
இந்த கூட்டணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட பலரும் விமர்சித்துள்ளனர். குறிப்பாக அதிமுக கூட்டணியில் உள்ள பல கட்சிகளும் அதிமுகவை விமர்சித்துள்ளது. இதற்கு தமிழ்நாடு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் எனவும் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.