மனைவி இறப்பில் மர்மம்... நாடகமாடிய கணவன் - விசாரணையில் வெளி வந்த அதிர்ச்சி!
மதுரை கோரிப்பாளையம் ஜம்புராபுரம் மார்க்கெட் பகுதியில் உள்ள வயல்காட்டுச்சாமி தெருவைச் சேர்ந்தவர் ராமரத்தினம் (வயது 65). பிளம்பராக வேலை செய்து வரும் இவருக்கு மனைவி மீனலோக்ஷ்சினி (61) மற்றும் திருமணமாகி தனித்தனியே வசிக்கும் மகன், மகள் உள்ளனர். இதனால் கணவன், மனைவி மட்டும் மதுரையில் உள்ள வீட்டில் வசித்து வந்தனர்.
இதனிடையே கடந்த சில மாதங்களாக கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதில் இருவரும் அடிக்கடி தகராறு செய்து வந்தனர். இந்நிலையில் மீனலோக்ஷ்சினி திடீரென வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்ததால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை பரிசோதித்து பார்த்தபோது அவர் உயிரிழந்தது தெரியவந்தது.
இதுகுறித்து தல்லாகுளம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கணவரிடம் விசாரித்தபோது, வீட்டில் இருந்த மீனலோக்ஷ்சினி தவறி கீழே விழுந்ததில் காயம் அடைந்தார். சிறிது நேரத்தில் உயிரிழந்து விட்டதாக ராமரத்தினம் தெரிவித்தார்.
மேலும் அவருக்கு பொட்டு வைத்து அழகு பார்த்து இறுதி சடங்குகளையும் செய்துள்ளார். இதற்கிடையே மீனலோசினியின் இறப்பில் மர்மம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் தல்லாகுளம் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர். அதற்கேற்ப மீனலோக்ஷ்சினியின் பிரேத பரிசோதனை அறிக்கையிலும் அவரது தலையில் கட்டையால் தாக்கிய காயங்கள் இருப்பது தெரியவந்தது.
இது தொடர்பாக மீண்டும் ராமரத்தினத்திடம் காவல்துறையினரிடம் விசாரித்தபோது அப்போது அவர் குடும்ப பிரச்சினையில் மனைவியை கட்டையால் தலையில் அடித்து கொலை செய்துவிட்டு நாடகமாடி பெற்ற பிள்ளைகளை ஏமாற்றியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து ராமரத்தினத்தை காவல்துறையினரை கைது செய்தனர்.