“வயநாடு மக்களுக்காக வாழ்நாள் முழுவதும் எனது கதவுகள் திறந்தே இருக்கும்” - ராகுல் காந்தி எம்.பி. பேட்டி!
வாழ்நாள் முழுவதும் வயநாடு மக்களுக்காக தனது கதவுகள் திறந்தே இருக்கும் எனவும், வயநாட்டில் உள்ள ஒவ்வொருவரையும் தான் நேசிப்பதாகவும் ராகுல் காந்தி எம்.பி. தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவால் தனிப்பெரும்பான்மை பெற முடியாத நிலையில், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைத்தது. அதேநேரம் மறுபுறம் காங்கிரஸ் கட்சி இந்த முறை மொத்தம் 99 தொகுதிகளில் வென்றது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த முறை வென்ற கேரள மாநிலம் வயநாட்டு மற்றும் உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியிலும் போட்டியிட்டார்.
இரண்டு தொகுதிகளிலும் ராகுல் காந்தி மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். விதிகளின்படி, ஒரு நபர் இரண்டு இடங்களில் தேர்தலில் போட்டியிடலாம். ஆனால் இரண்டிலும் வெற்றி பெற்றுவிட்டால் இரண்டில் எதாவது ஒரு பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். ஒருவரால் ஒரே நேரத்தில் இரு பதவியில் இருக்க முடியாது. ஒரு தொகுதியை மட்டுமே ஒரு நேரத்தில் பிரதிநிதித்துவப்படுத்த முடியும் என்பதே இதன் விதியாகும்.
இந்த கூட்டத்தை தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, “வயநாடு மற்றும் ரேபரேலி தொகுதிகளுடன் எனக்கு உணர்வுப்பூர்வமான தொடர்பு உள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக வயநாட்டின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தேன். வயநாடு மக்கள் என்னுடன் நின்று, மிகவும் கடினமான நேரத்தில் போராடும் ஆற்றலை எனக்கு அளித்தனர். மக்களின் அன்புக்கும் ஆதரவிற்கும் நன்றி. நாங்கள் செய்த வாக்குறுதிகளில் உறுதியாக இருந்து நிறைவேற்றுவோம்.
பிரியங்கா காந்தி வயநாட்டில் தேர்தலில் போட்டியிடுவார். தேர்தலில் வெற்றி பெற்று வயநாடு மக்களின் சிறந்த பிரதிநிதியாக இருப்பார் என்று நான் நம்புகிறேன். நான் அவ்வப்போது வயநாட்டுக்கும் செல்வேன். ரேபரேலியுடன் எனக்கு பழைய உறவு உள்ளது. மீண்டும் அவர்களை நான் பிரதிநிதித்துவப்படுத்துகிறேன் என்பதில் மகிழ்ச்சியடைகிறேன். ஆனால் இது ஒரு கடினமான முடிவு. எனது வாழ்நாள் முழுவதும் வயநாடு மக்களுக்காக எனது கதவுகள் திறந்தே இருக்கும். வயநாட்டில் உள்ள ஒவ்வொருவரையும் நான் நேசிக்கிறேன்”
இவ்வாறு தெரிவித்தார்.