"வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி" - எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!
மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நவி மும்பையில் நடைபெற்றது. இதில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 298 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 299 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 45.3 ஓவர்களில் 246 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
இந்நிலையில் பட்டம் பெற்ற இந்திய மகளிர் அணிக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "இன்று உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நமது இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி.
உங்கள் மன உறுதி, உறுதிப்பாடு மற்றும் குழு மனப்பான்மை நமது நாட்டிற்கு மகத்தான பெருமையை கொண்டு வந்துள்ளது. இந்த வெற்றி வெறும் களத்தில் கிடைத்த வெற்றி மட்டுமல்ல - நாடு முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான இளம் பெண்கள் பெரிய கனவுகளைக் காணவும், நம்பிக்கையுடன் தங்கள் இலக்குகளைத் துரத்தவும் இது ஒரு உத்வேகமாகும். சபாஷ், சாம்பியன்ஸ்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.