முருக பக்தர்கள் மாநாடு | வாகனங்களுக்கு இ-பாஸ் வழங்க உயர் நீதிமன்ற மதுரை கிளை அனுமதி மறுப்பு!
மதுரை சுற்றுச்சாலை அம்மா திடலில் இந்து முன்னணி சார்பில் ஜூன் 22-ல் முருக பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஆந்திரா துணை முதலமைச்சர் பவன் கல்யாண் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். நடிகர் ரஜினிகாந்திற்கும் இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. அவரும் கலந்து கொள்வதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், மதுரையை சேர்ந்த அரசு பாண்டி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், "ஜூன் 22 ஆம் தேதி மதுரையில் முருக பக்தர்கள் ஆன்மீக மாநாடு நடைபெற உள்ளது. கொடைக்கானல், ஊட்டி போன்ற சுற்றுலா தலங்களுக்கு இ-பாஸ் ஆன்லைன் மூலமாக வழங்கப்படுகிறது. அதை முறையை முருக பக்தர் மாநாட்டிற்கு வரும் வாகனங்களுக்கு, பாஸ் வழங்குவதிலும் பின்பற்றினால் எளிதாக அமையும். ஆகவே முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வரும் வாகனங்களுக்கு இ-பாஸ் முறையில் பாஸ் வழங்க உத்தரவிட வேண்டும்" என கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, "இ-பாஸ் முறையில் முருக பக்தர் மாநாட்டிற்கு பாஸ் வழங்க இயலாது. வரும் 21 ஆம் தேதி காலை 10 மணி வரை முருகன் பக்தர் மாநாட்டில் கலந்து கொள்ளும் வாகனங்களுக்கான பாஸ் கேட்டு விண்ணப்பிக்கலாம்" என குறிப்பிட்டு வழக்கை முடித்து வைத்தார்.