பண மோசடி: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரை சிறைபிடித்த பொதுமக்கள்!
பல கோடி ரூபாய் மோசடி செய்து விட்டு தலைமறைவான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரை பொதுமக்கள் சிறைபிடித்து, காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
சென்னை வில்லிவாக்கம் பாடி மேம்பாலம் சர்வீஸ் சாலையில் உள்ள அடுக்குமாடி
குடியிருப்பில் 'குபேரன் செல்' என்ற பெயரில் தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு
வந்தது. இந்த நிறுவனம் தங்க நகை, நில சேமிப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு
திட்டங்களை அறிமுகப்படுத்தியது.
இந்த நிறுவனத்தை ரங்கா ரெட்டி, அவரது மனைவி ஜெயலட்சுமி, மகன் ஹேம்நாத், வேகேஷ், சகோதரர்கள் விஷ்ணு ரெட்டி, கோபால் ரெட்டி, கஜலட்சுமி ஆகியோர் சேர்ந்து நடத்தி வந்தனர். இதில் வாரம் ரூ.250 வீதம் 300 வாரங்கள் தொடர்ந்து முதலீடு செய்தால் இறுதியில் தங்க நகை மற்றும் நிலம் வழங்குவதாக கவர்ச்சி விளம்பரம் செய்தது.
இதையும் படியுங்கள்: தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு! மொத்தம் எத்தனை பேர் தெரியுமா?
இந்த விளம்பரத்தை நம்பி பல்லாயிரக்கணக்கான மக்கள் வாரம் ரூ.250 வீதம் 300 வாரம் பணம் செலுத்தியுள்ளனர். இந்த நிலையில் பல கோடி ரூபாய் பணத்தை சுருட்டிக் கொண்டு குபேரன் அறக்கட்டளை நிறுவன உரிமையாளர்கள் அனைவரும் கடந்த டிசம்பர் மாதம் தலைமறைவாகி விட்டனர்.
பின்னர் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் இது குறித்து வில்லிவாக்கம் காவல்
நிலையம் மற்றும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இது
தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நெற்குன்றம், மேட்டுக்குப்பம் மெயின் ரோடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று (ஜன.21) இரவு நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுவதற்தாக ரங்கா ரெட்டியின் மனைவி ஜெயலட்சுமி, மகன் வேகேஷ் மற்றும் 4 வயது பேத்தியுடன் வந்துள்ளார்.
அப்போது அங்கு வந்த பொதுமக்கள் சிலர் அவர்கள் 3 பேரையும் சிறை பிடித்து, காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் அங்கு சென்ற கோயம்பேடு காவல்துளையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சிறை பிடிக்கப்பட்ட 3 பேரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.