இந்திய இளைஞர்களின் கனவுகளை மோடி அரசு சிதைக்கிறது!- மல்லிகார்ஜூன கார்கே விமர்சனம்!
மோடி அரசும், பாஜகவும் இந்திய இளைஞர்களின் கனவுகளையும், ஆசைகளையும் சிதைத்து வருகிறது என இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே விமர்சித்துள்ளார்.
தெலங்கானா சட்டப் பேரவைத் தேர்தல் நவம்பர் 30-ம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் மூன்று பெரிய கட்சிகள் போட்டியிடுகின்றன. பாரத ராஷ்டிர சமிதி, இந்திய தேசிய காங்கிரஸ், மற்றும் பாரதிய ஜனதா கட்சி ஆகிய மூன்று கட்சிகளுக்கும் இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. இத்தேர்தலுக்கான பிரச்சாரங்களும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேசிக்கொண்டிருந்த போது இளம்பெண் ஒருவர் மின்கம்பத்தின் மீது ஏறி இளைஞர்களின் பிரச்னைகளை பற்றி பேச முயன்றார். இச்சம்பவம் குறித்து இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில்,
"இளைஞர்கள் வேலைவாய்ப்பினை எதிர்பார்த்தனர். ஆனால் அதற்கு பதிலாக வேலைவாய்ப்பின்மையை மோடி அரசு கொடுத்துள்ளது. கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்துள்ளது.
மக்கள் பொருளாதார வளர்ச்சியை விரும்பினர். ஆனால் அதற்கு பதிலாக மோடி அரசானது விலை உயர்வைக் கொடுத்து அவர்களின் சேமிப்பை 47 ஆண்டுகளில் இல்லாத அளவிற்குக் குறைத்துள்ளது. அவர்கள் சமூக மற்றும் பொருளாதார நீதியை வேண்டினர். அதற்கு பதிலாக பொருளாதார அநீதியை வழங்கியது. 5% இந்திய பணக்காரர்கள் 60% இந்திய சொத்துகளை தன் வசம் வைத்துள்ளனர். இதனால் ஏழை மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பான இந்தியாவை அமைக்க மக்கள் விரும்பினர். ஆனால் மோடி அரசில் பெண்கள், குழந்தைகள், மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. மோடி அரசும், பாஜகவும் இந்திய இளைஞர்களின் கனவுகளையும், ஆசைகளையும் சிதைத்து வருகிறது.”
இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே பதிவிட்டுள்ளார்.