உலகக்கோப்பை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை நவ.5ல் சந்திக்கும் பிரதமர் மோடி..?
13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் கடந்த செப்டம்பர் 30ல் தொடங்கியது. இதில் 8 அணிகள் பங்கேற்ற நிலையில் லீக் சுற்று, அரையிறுதி சுற்றுகளை கடந்து இந்தியா,தென் ஆப்பிரிக்கா அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.
இதையடுத்து இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. நவிமும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 298 ரன்கள் எடுத்தது.
இதனை தொடர்ந்து 299 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 45.3 ஓவர்களில் 246 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இதையடுத்து பல்வேறு பிரபலங்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியை வரும் நவம்பர் 5ல் இந்திய பிரதமர் மோடி சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு ( BCCI ) பிரதமர் அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்ததாகவும் தற்போது மும்பையில் உள்ள வீரர்கள் செவ்வாய்க்கிழமை மாலை பிரதமர் மோடியை டெல்லியில் சந்திப்பர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.