'சீமானுடனான சந்திப்பு அரசியல் அல்ல, அன்பான சந்திப்பு' - தமிழிசை சௌந்தர்ராஜன் விளக்கம்!
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில், குடமுழுக்கு விழாவின் முப்பது நாட்கள் மண்டல பூஜை நிறைவு விழா சிறப்பாக நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட தமிழக பாஜக மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன், தனது கணவருடன் கோயிலுக்குச் சென்று மூலவர் சண்முகர், சூரசம்ஹார மூர்த்தி, தட்சிணாமூர்த்தி மற்றும் பெருமாள் சன்னதிகளில் சிறப்பு தரிசனம் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பல்வேறு அரசியல் மற்றும் கோயில் நிர்வாகம் தொடர்பான கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
திருச்செந்தூர் கோயிலில் தான் மனநிறைவான தரிசனம் செய்தபோதிலும், அங்கு பக்தர்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்கள் தனக்குக் கவலையை அளிப்பதாக தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்தார். "பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொண்டு கோயிலைச் சீரமைத்ததாகக் கூறுகிறார்கள். ஆனால், பக்தர்களுக்குத் தேவையான பேட்டரி வாகன வசதி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள் போதுமானதாக இல்லை" என்று அவர் சுட்டிக்காட்டினார்.
"கோடி கோடியாக அன்பளிப்பு வருகிறது. பேட்டரி வாகனங்களுக்குத் தொழிற்சாலை அமைப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், யாருக்கு இந்த வசதிகள் சென்று சேர்கின்றன? எதற்காக இந்த திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன? பக்தர்கள் எப்போதும் முதன்மை நிலையில் பார்க்கப்படுவதில்லை" என அவர் குற்றம்சாட்டினார். மேலும், சிறுபான்மை மக்களைத் திருப்திப்படுத்தும் முயற்சிகளில் அரசு ஈடுபடுவதாகக் கூறி, பெரும்பான்மை மக்களுக்கான வசதிகளை அரசு வேண்டுமென்றே புறக்கணிப்பதாகக் கடுமையாக விமர்சித்தார்.
உயர் நீதிமன்றம் கூட, தமிழ்நாட்டு இந்து சமய அறநிலையத் துறையும் கோயில் நிர்வாகமும் அவசரமாகக் கும்பாபிஷேகத்தை நடத்தியிருப்பதாகக் கவலை தெரிவித்திருப்பதை அவர் குறிப்பிட்டார்.
பக்தர்கள் லட்சக்கணக்கில் காணிக்கைகள் செலுத்தி வரும் நிலையில், அவர்களுக்கு அடிப்படை வசதிகள் கூட இல்லாதது வருத்தமளிப்பதாகவும், "கும்பாபிஷேகத்தை பிரமாண்டமாக நடத்தியதாக எண்ணாமல், அறநிலையத்துறை அமைச்சர் நேரடியாக வந்து பக்தர்களின் சிரமத்தைப் பார்க்க வேண்டும்" என்றும் தமிழிசை சௌந்தர்ராஜன் வலியுறுத்தினார்.
மேலும் சீமானுடன் நடந்த சந்திப்பு அரசியல் சந்திப்பா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, புன்னகையுடன், "அது அரசியல் சந்திப்பு அல்ல, அன்பான சந்திப்பு" என்று தமிழிசை பதிலளித்தார். வெளி மாநில மாணவர்களுக்கான தமிழ் பாடத்தை தமிழக அரசு நிறுத்தியிருப்பது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, "தமிழ்நாடு அரசு உடல் உறுப்புகளை வெளிநாடுகளுக்குக் கொடுக்கிறார்கள். ஆனால், வேறு மொழியைக் கற்றுக்கொள்ளக் கூடாது என்று சொல்கிறார்கள்" என்று பதிலளித்தார்.
தேசிய ஒற்றுமை இருக்க வேண்டும் என்றும், "மற்ற மாநிலத்தவர்கள் நம் மாநிலத்தில் படிக்க வேண்டும்; நாம் மற்ற மாநிலத்தில் சென்று படிக்க வேண்டும். தமிழ் தான் நம் உயிர். இதை தமிழக அரசு சற்று கவனிக்க வேண்டும்" என்பது தனது கருத்து என்றும் தமிழிசை சௌந்தர்ராஜன் கூறினார்.