“ஒருவேளை ‘செட்டிங்’ செய்கிறார்களோ?” - இபிஎஸ் குறித்து அமைச்சர் ரகுபதி விமர்சனம்!
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே டாஸ்மாக் கடையில் கள்ளச்சாராயம் விற்பனை செய்த சம்பவம் தொடர்பாக அதிமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,
"சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகில் வளையமாதேவியில் டாஸ்மாக் பாரில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக வீடியோ ஒன்று வெளியானது. அதனை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பதிவில் வெளியிட்டு ‘அய்யகோ, திமுகவை பாருங்கள்’ என்று எழுதியிருந்தார்.
இந்த வீடியோவின் உண்மைத்தன்மையை ஆராய்ந்தால் வீடியோவை வெளியிட்டது அதிமுகவின் அண்ணா தொழிற்சங்க வட்ட செயலாளராக இருந்த ராஜாவின் உறவினரான ரவி என்பவர் என்பதும் அவருக்கு கள்ள சாராயம் வாங்கி வந்து கொடுத்ததே அதிமுகவின் ராஜா தான் என்பதும் விசாரணையில் தெரியவந்து அந்த அதிமுக பிரமுகர் ராஜா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாக எடப்பாடி பழனிசாமி முன்வைத்த குற்றச்சாட்டுகளான அண்ணாநகர் பாலியல் வழக்கு, காரில் திமுக கொடிகட்டிய ரவுடிகள் தொடங்கி நேற்றைய கள்ளச்சாராய வீடியோ வரை குற்றச்சாட்டுகள் அனைத்திலும் அடுத்த நாளே அவர்கள் அதிமுகவினர் எனத் தெரிய வருகிறது; கைது செய்யப்படுகிறார்கள்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகில் வளையமாதேவியில் டாஸ்மாக் பாரில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக வீடியோ ஒன்று வெளியானது. அதனை எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பதிவில் வெளியிட்டு ‘அய்யகோ, திமுகவை பாருங்கள்’ என்று எழுதியிருந்தார்.
இந்த வீடியோவின் உண்மைத்தன்மையை ஆராய்ந்தால் வீடியோவை… https://t.co/T3S0AG0ykp
— எஸ்.ரகுபதி (@regupathymla) February 6, 2025
பாம் வைப்பதும் நானே எடுப்பதும் நானே என்ற கணக்கில் அவசர அவசரமாக எடப்பாடி ட்வீட் செய்வதும், அதனை அதிமுகவினர் பரப்புவதும் உண்மை வெளியானவுடன் அமைதி காப்பதும் என ஒரே ‘பேட்டர்ன்’தான். ஒரு அஜெண்டாவுடனேயே செயல்பட்டு வருகிறார். எதிர்க்கட்சித் தலைவர் என்பது அரசியலில் முக்கியமான பொறுப்பு.
ஆனால் சொந்த கட்சியினர் ஒரு குற்றத்தில் ஈடுபட்டது தெரிய வந்தால் உடனே ஒரு அறிக்கையை வெளியிட்டு அந்த சம்பவத்தையே திசை மாற்றி மக்களை குழப்பம் பணியைத்தான் எடப்பாடி பழனிசாமி செய்து வருகிறார். ஒருவேளை ‘செட்டிங்’ செய்கிறார்களோ என்றும் சந்தேகம் வருகிறது. இப்படிப்பட்ட அரசியல் செய்வதை விடுத்து எடப்பாடி பழனிச்சாமி ஆக்கப்பூர்வமான எதிர்கட்சித் தலைவராக செயல்படுவாரா?"
இவ்வாறு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்துள்ளார்.