ஆளுநர் ஏன் மசோதாக்களை நிறுத்தி வைத்தார்? - உச்சநீதிமன்றம் கேள்வி
பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமனத்திற்கு ஆளுநர் தடையாக இருப்பதாகவும், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போடுவதை எதிர்த்தும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் ஜெ.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வில் நேற்று முன்தினம் விசாரணை நடைபெற்றது.
அப்போது, அரசியல் சாசனப்படி ஆளுநர் அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுக்க வேண்டும் என ஆளுநர் தரப்புக்கு அறிவுரை வழங்கி, இந்த வழக்கில் larger intrest என்ற அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தது.
இந்த நிலையில் இவ்வழக்கு நீதிபதிகள் ஜெ.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அமர்வில் இன்று (பிப்.06) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அரசு மறுபடியும் மசோதாக்களை நிறைவேற்றி அனுப்பும் போது மசோதாக்களை ஆளுநரால் நிறுத்திவைக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு ஆளுநர் தரப்பு: ஆளுநர் மசோதாவை திரும்ப அனுப்பினால் அதனை சட்டமன்றம் மீண்டும் நிறைவேற்றுமனால் அது சட்டமாகிவிடும், பல்கலை. துணை வேந்தர் என்பது ஒரு மிக முக்கிய பொறுப்பு, அதனை அரசு மட்டுமே முடிவு செய்ய வேண்டும் என்று கருதுகிறீர்களா?.
நீதிபதிகள்: அரசு என்ன செய்ய முன்வருகிறதோ அது ஆளுநருக்கு பிடிக்கவில்லை என்றால் அது அவருடைய சொந்தக் கருத்துதானே?.
ஆளுநர் தரப்பு: தமிழ்நாடு அரசு மறைமுகமாக நீதிமன்றத்தின் மூலம் தங்களது மசோதாக்களை சட்டப்பூர்வமக்க கோருகிறார்கள்.
அப்போது குறுக்கீட்ட நீதிபதிகள், "நாங்கள் கேட்பது, அனைத்து மசோதாக்களையும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பும் வாய்ப்பு இருந்தபோது, ஏன் 2 மட்டும் முதலில் அனுப்பினார்? என்பதைக் கூறுங்கள். ஆளுநர் மசோதாக்கள் மீது முடிவு எடுக்காமல் நிறுத்தி வைத்தார் என்றால் அது எந்த பிரிவின் படி?, அரசியல் சாசனம் 200 அல்லாமல் வேறு ஏதேனும் விதிமுறை உள்ளதா?. ஆளுநர் தனக்கு வேண்டியபடி சுயமாக முடிவு எடுத்துள்ளார். எந்த ஆதாரங்களும் ஆவணங்களும் இல்லாமல் மசோதாக்களை நிறுத்தி வைத்ததற்கு ஆதரவாக வாதிடுவதை ஏற்க முடியாது. ஆளுநர் ஏன் மசோதாக்களை நிறுத்தி வைத்தார் என்பதை தெரிவிக்க வேண்டும். 10 மசோதாக்கள் மீது எந்த முடிவும் எடுக்காமல் நிறுத்தி வைத்ததற்கு என்ன காரணம் என்பதை விளக்க வேண்டும்" என்று கூறி வழக்கு விசாரணையை நாளை காலைக்கு ஒத்திவைத்தினர்.