தூய்மைப் பணியாளர்களை அரசு ஊழியராக்குங்கள் - பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்!
சென்னை மாநகராட்சியில் பணி நீக்கம் செய்யப்பட்ட தற்காலிகத் தூய்மைப் பணியாளர்களுக்கு நிரந்தரப் பணி வழங்கக் கோரிப் போராடி வரும் நிலையில், அவர்களை நிரந்தர ஊழியர்களாக்கக் கூடாது என எழுந்துள்ள புதிய யோசனைகளுக்கு பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த யோசனைகள் சமூகநீதி என்ற பெயரில் அவர்களைச் சுரண்டுவதற்கு வழி வகுக்கும் எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
அரசுப் பணிகளில் உள்ள தூய்மைப் பணியாளர்களுக்கு பணி நிலைப்பு வழங்கினால், அவர்களும், அவர்களின் அடுத்த தலைமுறையும் தொடர்ந்து அதே தொழிலைச் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும், இது சமூகநீதிக்கு எதிரானது என்றும் சிலர் தெரிவித்துள்ள கருத்துகளை அன்புமணி ராமதாஸ் தனது அறிக்கையில் விமர்சித்துள்ளார்.
இந்தப் புதிய யோசனைகள், தூய்மைப் பணியாளர்களின் 12 நாள் போராட்டத்தின் போதும், அரசு அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்ட போதும் முன்வைக்கப்படாதது ஏன் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மக்களின் கோபத்திலிருந்து அரசைப் பாதுகாக்கவே இந்த யோசனைகள் இப்போது முன்வைக்கப்படுகின்றன என்ற சந்தேகம் எழுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
“ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரால் மட்டுமே தூய்மைப் பணிகள் செய்யப்படக் கூடாது” என்பது பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடுதான் என்பதைத் தெளிவுபடுத்திய அன்புமணி, தூய்மைப் பணியாளர்களை அத்தொழிலில் இருந்து மீட்டு, கண்ணியமான வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்றார். ஆனால், இந்தப் பணியில் இருந்து மீட்கப்படும் பணியாளர்களுக்கு என்னென்ன மாற்றுப் பணிகள் வழங்கப்படும் என்பதை அரசு முதலில் வரையறுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
தூய்மைப் பணியாளர்களை தொழில்முனைவோர் ஆக்குவது, நிரந்தர அரசுப் பணிகளை வழங்குவது போன்ற சில மாற்று வாழ்வாதாரத் திட்டங்களை அவர் தனது அறிக்கையில் பரிந்துரைத்துள்ளார். 5 முதல் 7 ஆண்டுகள் தூய்மைப் பணியில் பணிபுரிந்தவர்களுக்கு, அவர்களது கல்வித் தகுதிக்கு ஏற்ற அரசுத் துறைகளில் நிரந்தரப் பணி வழங்கலாம். அவர்களுக்கு ஓய்வுக்காலப் பயன்களுடன், 50% மானியத்துடன் ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கி தொழில்முனைவோராக மாற்றலாம்.
இத்தகைய உறுதியான மாற்றுத் திட்டங்களை அறிவிக்காமல், வெறுமனே பணி நிலைப்பு வழங்கக்கூடாது என வாதிடுவது, அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் அவர்களைச் சுரண்டுவதற்குத் துணைபோவது போன்றது என அவர் எச்சரித்துள்ளார்.
மேலும், இந்த மாற்று வாழ்வாதாரங்கள் வழங்கப்பட்டாலும், அவர்கள் தூய்மைப் பணி செய்யும் காலத்தில் நிரந்தரப் பணியாளர்களுக்குரிய ஊதியம் மற்றும் பிற உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். எந்தவித மாற்றுத் திட்டத்தையும் முன்வைக்காமல், பணி நிலைப்பு வழங்கக்கூடாது என்று மட்டும் சொல்வது, சமூகநீதி என்ற பெயரில் தூய்மைப் பணியாளர்களுக்கு இழைக்கப்படும் துரோகம் என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.