For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் மூலம் பங்கு சந்தையில் மிகப்பெரிய முறைகேடு நடந்திருக்கிறது!” - ராகுல்காந்தி குற்றச்சாட்டு

09:33 PM Jun 06, 2024 IST | Web Editor
“தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் மூலம் பங்கு சந்தையில் மிகப்பெரிய முறைகேடு நடந்திருக்கிறது ”   ராகுல்காந்தி குற்றச்சாட்டு
Advertisement

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் மூலம் பங்கு சந்தையில் மிகப்பெரிய முறைகேடு நடந்திருக்கிறது என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலுக்கான முடிவுகள் ஜூன் 4ம் தேதி வெளியாகின. இதில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனவே கூட்டணி கட்சிகளுடன் ஆட்சியமைக்க இருக்கிறது. பாஜக தனியாக 240 தொகுதிகளில் ஜெயித்திருக்கிறது. ஆட்சியமைக்க 272 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். எனவே தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஐக்கிய ஜனதா தளத்தை பாஜக நம்பியிருக்கிறது.

இந்நிலையில் காங்கிரஸ் மிக முக்கிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் மூலம் பங்கு சந்தையில் மிகப்பெரிய முறைகேடு நடந்திருக்கிறது என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். 7 கட்டங்களாக நடந்த மக்களவைத் தேர்தல் தேர்தல் ஜூன் 1ம் தேதி மாலை 6 மணியுடன் முடிவுற்றது. உடனே செய்தி நிறுவனங்கள் எக்சிட் போல் எனப்படும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகுளை வெளியிட்டன. அதில், பாஜக தனிப்பெரும்பான்மை பெறும் என்றும், குறைந்தபட்சம் 300 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் எனவும் தெரிவித்திருந்தது. என்டிஏ கூட்டணி 353 முதல் 368 வரை வெல்லும் என ஏபிபி சி-வோட்டரும், இந்தியா டுடே-ஆக்சிஸ் மை இந்தியா 381, இந்தியா நியூஸ் டைனமிக்ஸ் 371, இந்தியா டிவி சிஎன்எக்ஸ் 386, என்டிடிவி ஜான்கிபாத் 377 தொகுதிகளை என்டிஏ கூட்டணி கைப்பற்றும் என செய்தி நிறுவனங்கள் கருத்து கணிப்புகளை வெளியிட்டிருந்தன.

கருத்துக்கணிப்பு வெளியான பிறகு பங்கு சந்தைகள் திடீரென ஏற்றம் கண்டன. கருத்துக்கணிப்புகள் வெளியான அடுத்த நாளா ஜூன் 3ம் தேதி பங்கு சந்தை சென்செக்ஸ் சுமார் 2,000 புள்ளிகள் ஏற்றத்துடன் துவங்கியது. நாளின் முடிவில் சென்செக்ஸ் சுமார் 2,500 புள்ளிகள் ஏற்றம் பெற்றிருந்தது. அதேபோல நிஃப்டி ப்ரீ- ஓப்பனிங்கில் (pre-opening) சுமார் 1,000 புள்ளிகள் ஏற்றத்துடன் துவங்கியது. நாளின் இறுதியில் சுமார் 700 புள்ளிகள் ஏற்றத்தில் முடிந்தது.

இதற்கு காரணம் ஆளும் அரசாங்கத்தின் கொள்கைகள்தான். பாஜக ஆட்சியில் இருந்தால் அதன் கொள்கைகளும் அப்படியே இருக்கும் என்பதால் அதன் அடிப்படையில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்தனர். ஆனால், தற்போது கூட்டணி ஆட்சி என ரிசல்ட் வந்திருப்பதால் முதலீட்டாளர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். இதைத்தான் ராகுல் காந்தி குற்றச்சாட்டாக முன்வைத்திருக்கிறார்.

இது தொடர்பாக இன்று (06.06.2024) செய்தியாளர்களை சந்தித்த அவர், "தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் மூலம் பங்குச்சந்தைகளில் திட்டமிட்ட முறைகேடு நடந்திருக்கிறது. இந்த முறைகேடு குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை தேவை. பங்குச்சந்தையில் முதலீடு செய்த சிறு முதலீட்டாளர்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். தேர்தல் ரிசல்ட் அன்று முதலீட்டாளர்கள் ரூ.30 லட்சம் கோடியை இழந்துள்ளனர். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பாஜக வெற்றியை மிகைப்படுத்தியது ஏன்?

பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யும்படி 5 கோடி குடும்பங்களுக்கு பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஏன் ஆலோசனைகளை வழங்கினர்? முதலீட்டு ஆலோசனைகளை வழங்குவதுதான் அவர்களின் வேலையா? ரிசல்ட் அறிவிக்கப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாக முதலீடு செய்து 5 கோடி குடும்பங்களை ஏமாற்றி பெரும் லாபம் சம்பாதித்த பாஜகவுக்கும், போலியான கருத்துக் கணிப்பாளர்களுக்கும், சந்தேகத்திற்குரிய வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் என்ன தொடர்பு? இது இதுவரை இல்லாத மிகப் பெரிய பங்குச் சந்தை மோசடி. எனவே இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்" என்று கூறியுள்ளார்.

மேலும், ஜூன் 4ம் தேதிக்கு முன்பு பங்குகளை வாங்கினால், அதன் விலை அடுத்தடுத்த நாட்களில் உயரும் என்று மோடியும், அமித்ஷாவும் அதானிக்கு சொந்தமான என்டிடிவிக்கு பேட்டியளித்திருந்தார்கள். இது குறித்தும் விசாரிக்கப்பட வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் மூலம் பங்கு சந்தையில் மிகப்பெரிய முறைகேடு நடந்திருக்கிறது என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Tags :
Advertisement