பாஜக கூட்டணியில் மதுரையில் தென் இந்திய பார்வர்ட் பிளாக் போட்டி?
பாஜக கூட்டணியில் தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சிக்கு மதுரை நாடாளுமன்ற தொகுதி ஒதுக்கீடு செய்யுமாறு கடிதம் அளித்தனர்.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நாடு முழுவதும் அதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தொகுதி பங்கீடு, கூட்டணி, வேட்பாளர் அறிவிப்பு, நிர்வாகிகளுடன் ஆலோசனை, தேர்தல் அறிக்கை தயாரிப்பு என தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
மார்ச் 2 ஆம் தேதி பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது. டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் முதற்கட்டமாக 195 வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ள பட்டியலை பாஜக தேசிய பொதுச்செயலாளர் வினோத் தவ்டே வெளியிட்டார். அதன்படி, அறிவிக்கப்பட்டுள்ள பட்டியலில், 28 பெண்கள், 47 இளைஞர்கள், 27 பட்டியலினத்தவர்கள், 17 பழங்குடியினத்தவர்கள், 57 பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இதையும் படியுங்கள் : சீர்காழி சென்றடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இன்று திறந்து வைக்கிறார்!
இந்நிலையில், தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவர் திருமாறன் ஜி தலைமையில் நிர்வாகிகள் குழுவினர் பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் ஆகியோரிடம் விருப்ப கடிதத்தை அளித்தனர்.
தேசிய ஜனநாயக கூட்டணிகள் தொடர்ந்து அங்கம் வகிக்கும் தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சிக்கு மதுரை நாடாளுமன்ற தொகுதியை ஒதுக்கீடு செய்யுமாறு விருப்ப கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மதுரை நாடாளுமன்ற தொகுதியை ஒதுக்கீடு செய்யும் பட்சத்தில் தமிழ்நாடு முழுவதும் பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி மூன்றாம் முறையாக பிரதமராக வரவேண்டும் என்கிற விருப்பத்தின் அடிப்படையில் கூட்டணியில் தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய பார்வர்டு பிளாக் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் உசிலம்பட்டி மற்றும் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிகளில் பாஜக கூட்டணியில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.