மதுரை பள்ளி மாணவன் கடத்தல் வழக்கு: தற்கொலை செய்து கொண்ட ஐஏஎஸ் அதிகாரியின் மனைவி உடல் மதுரை கொண்டு வரப்படுகிறது!
ரூ.2 கோடி கேட்டு மாணவன் கடத்தப்பட்ட வழக்கில் தற்கொலை செய்து கொண்ட சூர்யாவின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்படுவதாக அவரது தாயார் தெரிவித்துள்ளார்.
மதுரையில் கடந்த 11ஆம் தேதி 14 வயது பள்ளி மாணவர் ஒருவரை மர்ம கும்பல் ஒன்று கடத்தி அவரை விடுவிக்க வேண்டுமானால் ரூ.2 கோடி தர வேண்டும் அந்த மாணவனின் தாயாருக்கு மிரட்டல் விடுத்தது. இந்த மிரட்டலையடுத்து அந்த ஆடியோவுடன் மாணவனின் தாயார் போலீசிடம் புகார் அளித்தார். புகாரையடுத்து மாணவனை அழைத்து செல்லும் ஆட்டோ டிரைவரின் மொபைல் எண்ணை வைத்து 3 மணி நேரத்திலேயே மாணவனை போலீசார் மீட்டனர்.
பின்னர் தொடர் தேடுதல் வேட்டையில் கடத்தல் கும்பலை சேர்ந்த தேனி மாவட்டம் முன்னாள் காவலர் செந்தில்குமார், திருநெல்வேலி மாவட்டம் ரஹ்மான்பேட்டையை சேர்ந்த அப்துல் காதர், தென்காசி மாவட்டம் சிவகிரியை சேர்ந்த வீரமணி, காளிராஜ் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த நால்வரிடமும் நடத்திய விசாரணையில், கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் ஐஏஎஸ் அதிகாரி ரஞ்சித் என்பவரின் மனைவி (சூர்யா), பிரபல ரவுடி ஐகோட் மகாராஜா ஆகிய இருவரையும் தனிப்படை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். இருவரும் கர்நாடகாவில் தலைமறைவாக இருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து போலீசார் அங்கு விரைந்தனர்.
மேலும் சூர்யா மற்றும் மாணவனின் தாயார் ராஜலெட்சுமி இடையே காம்ப்ளக்ஸ் விற்பனையில் பணம் கொடுக்கல், வாங்கல் மற்றும் இடம் விற்பனை தொடர்பாக பிரச்னை இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் சூர்யா, ரவுடி மகாராஜா மூலமாக மாணவனை கடத்தி ராஜலெட்சுமியிடம் பணம் கேட்டு மிரட்டியிருக்கலாம் எனவும் காவல்துறையினர் சந்தேகம் கொண்டிருந்தனர்.
இச்சூழலில் நேற்று இந்த கடத்தலுக்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என எழுதி வைத்துவிட்டு குஜராத்தில் சூர்யா தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இறந்து போன சூர்யாவுடைய உடல் விமானம் மூலம் இன்று இரவு மதுரை விமான நிலையம் கொண்டு வரப்படுகிறது. மதுரை விமான நிலையத்திலிருந்து சாலை மார்க்கமாக சொந்த ஊரான விளாத்திகுளம் பகுதிக்கு எடுத்து செல்லப்பட்டு, அங்கு அடக்கம் செய்யப்படுவதாக அவரது தாயார் உமா தெரிவித்துள்ளார்.