அனுமதியின்றி போராட்டம் - குஷ்பு உள்ளிட்ட 317 பேர் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு!
அனுமதியின்றி போராட்டம் நடத்திய பாஜகவைச் சேர்ந்த குஷ்பு உள்ளிட்ட 317 பேர் மீது 9 பிரிவுகளின் கீழ் மதுரை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மதுரை திலகர் திடல் காவல் நிலையத்திற்கு உட்பட்ட செல்லத்தம்மன் கோயில் அருகே உள்ள கண்ணகி கோயிலில் இருந்து, அண்ணா பல்கலை பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்தும், பெண்களுக்கு எதிராக நடைபெறும் அநீதியை கண்டித்தும் “நீதிக்கான பேரணியை” பாஜகவின் மகளிர் அணியினர் நேற்று ஏற்பாடு செய்தனர்.
இதற்கு காவல்துறை அனுமதி மறுத்தது. ஆனால் பாஜக மகளிர் அணியின் சார்பில் இந்த நீதிக்கான பேரணி காவல்துறை தடையை மீறி நேற்று நடைபெற்றது. இதில் பாஜக மகளிரணி தலைவர் உமாரதி, பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு, மதுரை பாஜக மாவட்ட தலைவர் மஹா.சுசீந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும் தமிழ்நாட்டை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாஜக மகளிரணியினர் இப்பேரணியில் பங்கேற்றனர். தொடர்ந்து நிதிக்கான பேரணியை துவங்கிய போது காவல்துறையினர் குஷ்பு, உமாரதி உள்ளிட்ட மகளிர் அணி நிர்வாகிகளை கைது செய்து அருகில் இருந்த தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து, பின்னர் மாலையில் விடுவித்தனர்.
இதனையடுத்து மதுரை மேற்கு கிராம நிர்வாக அலுவலர் ஜலபதி அளித்த புகாரின் அடிப்படையில், அனுமதியின்றி ஒன்று கூடுதல், போராட்டம் நடத்தல், வாகனத்தை தடையாக பயன்படுத்தல் போன்ற 9 பிரிவுகளின் கீழ் குஷ்பு, உமாரதி உள்ளிட்ட 317 பேர் மீது மதுரை மாநகர் திலகர் திடல் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.