சுதாகர் ரெட்டி மறைவு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி மறைந்த செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.
தொடக்ககாலத்தில் மாணவத் தலைவராக இருந்து, நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றி, பின்னாளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய தலைவராக உயர்ந்தது வரை சுதாகர் ரெட்டி தனது வாழ்வைப் பாட்டாளிகள், உழவர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் போராட்டங்களுக்காகவே அர்ப்பணித்தார்.
கூட்டணி பற்றிய பேச்சுக்கள் மற்றும் தலைவர் கலைஞர் நினைவு நிகழ்வில் அவர் பங்கேற்றது உட்பட தமிழ்நாட்டிற்கு அவர் மேற்கொண்ட பல பயணங்களின் போது அவரது அரவணைப்பு மற்றும் சிந்தனையில் தெளிவை நான் நேரில் கண்டிருக்கிறேன். நீதி மற்றும் கண்ணியத்திற்கான போராட்டத்திற்கு அவரது வாழ்க்கை தொடர்ந்து உத்வேகம் அளிக்கும். அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பொதுவுடைமை இயக்கத் தோழர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்". இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.