மதுரை எய்ம்ஸ்: செங்கலுக்கு மாலை அணிவித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்!
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் செங்கலுக்கு மாலை அணிவித்து, கருப்பு கொடியுடன் காங்கிரஸ் மாணவர் அணியினர் 5வது ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தினர். அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா தோப்பூர் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக பிரதமர் மோடியால் 2019-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. பின்னர் ஜப்பானின் ஜெய்க்கா நிறுவனத்துடன் இணைந்து எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என கூறப்பட்டது. ஆனால் ஐந்து ஆண்டுகள் முடிவுற்ற நிலையில் தற்போது வரை கட்டிடங்கள் எழுப்பப்படவில்லை.
இந்நிலையில் மதுரை வந்த மோடியை கண்டித்து மாணவர் காங்கிரஸ் அணியினர் சார்பில் மதுரை மாவட்டத் தலைவர் வினோத், மாவட்ட செயலாளர் சுரேஷ், மாநில பொதுச்செயலாளர் விஜய தீபன் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்டோர் எய்ம்ஸ் மருத்துவமனை வளாகப் பகுதியில் செங்கல் ஒன்றிற்கு மாலை அணிவித்து 5ம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தினர்.
மேலும் மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை வர தாமதமானதால் “மோடியே திரும்பி போ”, "கோ பேக்" மோடி என கோஷம் எழுப்பினர். இதனை தொடர்ந்து ஆஸ்டின் பட்டி போலீஸார் விரைந்து வந்து கருப்பு கொடி காட்டிய மாணவர் காங்கிரஸ் கட்சியினரை கைது செய்தனர்.