#MadhyaPradesh | விளம்பரத்தில் நடித்த காவலர் இடைநீக்கம்!
மத்தியப்பிரதேசத்தில் சீருடையில் ஒரு தனியார் பயிற்சி நிறுவனத்தை விளம்பரப்படுத்திய பெண் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
பொதுவாக தனியார் கல்வி நிறுவனங்கள், பயிற்சி மையம் உள்ள நிறுவனங்களை விளம்பரப்படுத்தவது வழக்கமான ஒன்று. குறிப்பாக சினிமா நடிகர், நடிகைகள் இது போன்ற விளம்பரங்களில் நடிப்பது உண்டு. ஆனால் தற்போது, இன்ஸ்டா பிரபலங்கள் அதிகளவில் விளம்பரத்தில் ஈடுபடுகின்றனர். இந்த சூழலில் மத்தியப் பிரதேசம் ரத்லாம் மாவட்டத்தில் போட்டித் தேர்வாளர்களுக்கான தனியார் பயிற்சி மையம் ஒன்றை பெண் காவலர் ஒருவர் விளம்பரப்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து, அவர் காவல் சீருடையிலேயே விளம்பரத்தில் ஈடுபட்டது பேசும் பொருளானது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவியது. இதனையடுத்து, ரத்லோம் காவல் கண்காணிப்பாளர் ராகுல் லோதா இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கூறுகையில், "ஒரு பெண் காவலர், தனது சீருடையில் ஒரு தனியார் பயிற்சி நிறுவனத்தை ஊக்குவிப்பது, சமூக ஊடகங்கள் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது’’ என்று தெரிவித்தார்.
மேலும், காவல் சீருடையில் தனியார் நிறுவனத்தை விளம்பரப்படுத்திய பெண் காவலரை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். இது தவிர, அந்த பெண் காவலர் மீது துறைரீதியான விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.