மடப்புரம் காவலாளி மரண விவகாரம் | நாளை மறுநாள் தவெக கண்டன ஆர்ப்பாட்டம்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் தற்காலிகமாக அஜித்குமார் (29) என்பவர் பணிபுரிந்து வந்தார். இந்த கோயிலுக்கு வந்த பெண்ணின் காரில் இருந்த நகை மாயமான சம்பவம் தொடர்பாக அஜித்குமார் விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்துச் செல்லப்பட்டார். தொடர் விசாரணையின் போது அவர் காவல்நிலையத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார். காவல்துறையினர் அஜித்குமாரை தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டு தவெக சார்பில் நாளை மறுநாள் (ஜூலை 3) சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
அறிவிப்பு
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மடப்புரம் கோவில் காவலர் அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டும், உயர் நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பின்கீழ் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும், கடந்த…
— TVK Party HQ (@TVKPartyHQ) July 1, 2025
இதுகுறித்து தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,
"சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மடப்புரம் கோயில் காவலர் அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டும், உயர் நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பின்கீழ் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும், கடந்த நான்கு ஆண்டுகளில் 24 பேர் காவல் நிலையத்தில் மரணம் அடைந்தது குறித்து உயர்நீதிமன்றமே அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில், இது குறித்துத் தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தியும் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், கட்சித் தலைவரின் உத்தரவின் பேரில், சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே, வருகிற 03.07.2025 அன்று காலை 10.00 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்பதை நமது கட்சித் தலைவர் விஜயின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறேன்"
இவ்வாறு தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் தெரிவித்துள்ளார்.