ஜம்மு-காஷ்மீர் காவல் நிலையத்தில் வெடிவிபத்து : 7 பேர் பலி..!
டெல்லி செங்கோட்டை அருகே கடந்த நவம்பர் 10ஆம் தேதி, மாலையில் கார் ஒன்று வெடித்துச் சிதறியது. இதனால் அருகில் இருந்த வாகனங்களும் தீப்பற்றி எரிந்தன. இதில் 13 பேர் பலியாகினர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இச்சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வவிசாரணையில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனிடையே டெல்லி கார் வெடிவிபத்தை தொடர்ந்து நாடுமுழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டது. அப்போது ஹரியானாவில் உள்ள பரிதாபாத் பகுதியில் 360 கிலோ வெடிமருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தை சேர்ந்த முகமில் ஷகீல் கனியா என்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு, பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்களை ஜம்மு காஷ்மீரின் நவ்காம் போலீஸ் நிலையத்தில் வைத்து தடயவியல் குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது திடீரென அந்த வெடிபொருட்கள் வெடித்ததால் தடயவியல் குழு, போலீசார் என 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 30க்கும் மேற்ப்ட்டோர் காயமடந்துள்ளனர். காயமடைந்துள்ளவர்களில் 5 பேர் படுகாயமடைந்திருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் என்று அச்சம் எழுந்துள்ளது.