அனல்பறந்த மக்களவை - அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு!
நாடாளுமன்ற மக்களவை இன்று ஒத்திவைக்கப்பட்டது. எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக, பிற்பகல் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.
அமெரிக்காவின் வரி விதிப்புக் கொள்கைகள் மற்றும் பீகாரில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
அவை கூடியதும், எதிர்க்கட்சித் தலைவர்கள் பல்வேறு விவகாரங்கள் குறித்துப் பேச வாய்ப்பு கோரினர். ஆனால், சபாநாயகர் அதற்கு அனுமதிக்காததால், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முன் வந்து கோஷமிட்டனர்.
குறிப்பாக, அமெரிக்காவின் வரி விதிப்பு இந்தியாவின் பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்தும், பீகாரில் வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் ஏதேனும் முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் கவலை தெரிவித்தன. இந்த விவகாரங்கள் குறித்து அவையில் விரிவாக விவாதிக்கப்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
மேலும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் அமளியால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. சபாநாயகர் பலமுறை அமைதி காக்குமாறு அறிவுறுத்தியும், உறுப்பினர்கள் தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர். இதனையடுத்து, வேறு வழியின்றி சபாநாயகர் மக்களவையை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.
இந்த அமளி, நாடாளுமன்றத்தின் தற்போதைய கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் ஆளும் தரப்புக்கு எதிராக பல்வேறு முக்கியப் பிரச்சினைகளை எழுப்பி வருகின்றனர். அடுத்த கட்ட விவாதம் பிற்பகல் அமர்வில் தொடருமா அல்லது மீண்டும் அமளி தொடருமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.