தூத்துக்குடியில் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் செலுத்த விலக்கு அறிவிப்பு!
தூத்துக்குடியில் நிவாரண பொருட்கள் கொண்டு வரும் வாகனங்களுக்கு இன்று முதல் சுங்க கட்டணங்களுக்கு விளக்கு அளித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, தென் மாவட்டங்கள் அனைத்தும் தனித் தீவாக காட்சியளித்தன. அடிப்படை வசதிகள் இன்றி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. அரசு அதிகாரிகள் மற்றும் மீட்புப் படையினர் தொடர் முயற்சியால், பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளை இயல்பு நிலைக்கு கொண்டுவர பல்வேறு முயறிசிகளை மேற்கொண்டு வருகின்றனர். இன்னும் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில், அதனை வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசும், அரசியல் கட்சிகளும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் தங்களால் முடிந்த பல்வேறு நிவாரண உதவிகளை செய்து வருகின்றனர். பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பல இளைஞர்களும், பொதுமக்களும் பல உதவிகளை பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு செய்து வருகின்றனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து மழை வெள்ள நிவாரண பொருட்கள் வரும் நிலையில், இந்த வாகனங்களுக்கும் சுங்க கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.
இந்நிலையில், நிவாரண பொருட்கள் கொண்டு வரும் வாகனங்களுக்கு தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மூன்று சுங்க சாவடிகளிலும் இன்று 24-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை
சுங்க கட்டணங்களுக்கு விளக்கு அளித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி உத்தரவிட்டுள்ளார்.