உத்தரகண்ட்டில் மேக வெடிப்பு - தொடரும் சோகம்; உயிரிழப்புகள் அதிகரிப்பு!
உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பு சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பத்தில் 4 பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியான நிலையில், தற்போது உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் 8 முதல் 10 ராணுவ வீரர்கள் மாயமாகியுள்ளனர். இந்த மேக வெடிப்பு, ஹர்சிலுக்கு அருகே உள்ள தாராலி கிராமத்தில் கீர் கங்கா ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் நிகழ்ந்துள்ளது. இதனால், திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கிராமத்திற்குள் தண்ணீர் புகுந்து வீடுகள், கடைகள், ஹோட்டல்கள் என பல கட்டிடங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
சம்பவம் குறித்து அறிந்ததும், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர், இந்திய ராணுவத்தினர், இந்தோ-திபெத் எல்லைக் காவல் படையினர் (ITBP) ஆகியோர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். மோசமான வானிலை மற்றும் தொடர் மழை காரணமாக மீட்புப் பணிகள் மிகவும் சவாலானதாக உள்ளன.
இந்தத் துயரச் சம்பவம் குறித்து அறிந்த பிரதமர் நரேந்திர மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். மேலும், உத்தரகண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி அவர்களைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு நிலைமையைக் கேட்டறிந்து, தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக உறுதி அளித்துள்ளார்.