அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு "சமத்துவம் காண்போம்" போட்டிகள் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு "சமத்துவம் காண்போம்" போட்டிகள் நடைபெற உள்ளதாக தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
"தமிழ்நாடு சட்டசபையில் 13.4.2022 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் "வடக்கே உதித்த சமத்துவச் சூரியன், பலர் வாழ்வில் கிழக்காய் இருந்த பகலவன்" நமது அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்துத் தந்த அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளான வருகிற 14-ம் தேதி "சமத்துவ நாளாக" கொண்டாடுவது என்று தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது எனச் சட்டமன்ற விதி எண்.110-ன் கீழ் அறிவித்தார்.
அதன் அடிப்படையில், தமிழ்நாட்டில் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளான ஏப்ரல் 14-ம் தேதி ஆண்டுதோறும் சமத்துவ நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக, செய்தி மக்கள் தொடர்புத் துறையின் ஊடக மையம் வாயிலாக "சமத்துவம் காண்போம்" என்ற தலைப்பில் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பங்கு பெறும் வகையில் சமூக ஊடகங்களான எக்ஸ் தளம், இன்ஸ்டாகிராம், பேஸ்புக், வாட்ஸ்-அப், யூடியூப் வாயிலாக 10-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன.
"சமத்துவம் காண்போம்" என்கிற முழக்கம் சமூகநீதி என்ற கருத்தாக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. தனிமனிதருக்கும். சமூகத்திற்கும் இடையேயுள்ள சமமான, நியாயமான உறவைக் குறிக்கிறது. தனிமனிதரின் சமூகச் செயல்பாடுகளுக்குத் தேவையானவற்றை நிறைவுசெய்து, பாகுபாடற்ற நீதியையும், நியாயத்தையும் நிலைநிறுத்துவதற்கான சூழலை உருவாக்குவதற்காகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இதன்மூலம் மக்கள் அனைவருக்கும் சமமான நீதி, வேலை வாய்ப்புகள், பாதுகாப்பான வாழ்க்கை ஆகியவை அமைவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது.
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இப்போட்டிகளில் வெற்றிபெறும் வெற்றியாளர்களை நேரில் சந்தித்து, பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கிச் சிறப்பிக்கவுள்ளார். எனவே, பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் அதிக அளவில் இப்போட்டிகளில் பங்கேற்குமாறும், தங்களது படைப்புகளை அனுப்பிவைக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேற்கண்ட இப்போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் tndiprmhsamathuvamkanbom @gmail.com என்ற மின்னஞ்சல் மற்றும் கீழ்க்கண்ட விரைவு கியூஆர் குறியீடு வாயிலாகத் தங்கள் படைப்புகளை 30.04.2025-க்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.