"மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்" - சுற்றுப்பயணத்தை தொடங்கினர் எடப்பாடி பழனிசாமி!
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி "மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்பதை வலியுறுத்தி கோவை மேட்டுப்பாளையத்தில் இருந்து சுற்றுப்பயணம் தொடங்கியுள்ளார்.
இந்த நிலையில் அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, மேட்டுபாளையம், தேக்கம்பட்டியில் உள்ள வனப்பத்திரகாளி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அவருடன் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் கோவை மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கே.ஆர்.ஜெயராம், அம்மன் அர்ஜூனன், பி.ஆர்.ஜி.அருண்குமார், ஏ.கே.செல்வராஜ், பொள்ளாச்சி ஜெயராமன், உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். இதனை தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளுடன் கலந்துரையாடி வருகிறார்.
தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி மேற்கொள்ளும் சுற்றுப்பயணத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல்.முருகன், அகில பாரத மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் ஆகியோர் இன்று மாலை மேட்டுபாளையம் பேருந்து நிலையம் முன்பு நடக்கும் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர்.