"வலுவாக இணைவோம், தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக ஒன்றுபடுவோம்" - பிரதமர் மோடி பதிவு
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ள நிலையில், கூட்டணி விவகாரங்கள் சூடுபிடித்துள்ளது. தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிக்க பாஜக பல முயற்சிகளை கையில் எடுத்து வருகிறது. குறிப்பாக கூட்டணியில் இருந்து விலகி சென்ற அதிமுகவை மீண்டும் கூட்டணிக்குள் கொண்டுவர, பாஜக முயற்சித்து வந்தது. அதன் முக்கிய பகுதியாக நேற்று (ஏப்.11)சென்னை வருகை தந்த அமித்ஷா இந்த கூட்டணியை உறுதி செய்தார். அண்ணாமலை, இபிஎஸ், அமித்ஷா ஆகியோர் நேற்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
இந்த சந்திப்பில் செய்தியாளர்களிடம் பேசிய அமித்ஷா, “வரும் தேர்தலில் அதிமுக, பாஜக இணைந்து செயல்படும். தேசிய அளவில் மோடி தலைமையில் இந்த கூட்டணி அமைந்துள்ளது. எடப்பாடி தலைமையிலும் இந்த கூட்டணி அமைந்துள்ளது. 1998ஆம் ஆண்டு முதல் அதிமுக, பாஜக கூட்டணி தொடங்கியது. ஒரு காலத்தில் பாஜக அதிமுக கூட்டணி 31 இடங்களில் வெற்றிப்பெற்றது. அதிமுக - பாஜக இணைந்து தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும். எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் கூட்டணி அமைய உள்ளது. திமுக எந்த வகையான கெடுபிடியும் பாஜகவிடம் வைக்கவில்லை” என தெரிவித்தார்.
வலுவாக இணைவோம், தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக ஒன்றுபடுவோம்!
தேசிய ஜனநாயகக் கூட்டணி என்ற குடும்பத்தில் அஇஅதிமுக இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் இதர கூட்டாளிகளுடன் ஒன்றிணைந்து, நாம் தமிழ்நாட்டை முன்னேற்றத்தின் புதிய உச்சங்களுக்குக்…
— Narendra Modi (@narendramodi) April 11, 2025
இந்த நிலையில், பாஜக - அதிமுக கூட்டணி உறுதியானது குறித்து பிரதமர் மோடி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,
"வலுவாக இணைவோம், தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக ஒன்றுபடுவோம்! தேசிய ஜனநாயகக் கூட்டணி என்ற குடும்பத்தில் அஇஅதிமுக இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் இதர கூட்டாளிகளுடன் ஒன்றிணைந்து, நாம் தமிழ்நாட்டை முன்னேற்றத்தின் புதிய உச்சங்களுக்குக் கொண்டுசெல்வோம், மாநிலத்திற்கு அயராது பாடுபடுவோம். தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் தொலைநோக்குப் பார்வையை செயல்படுத்தும் ஓர் அரசை நாம் உறுதிசெய்வோம். தமிழ்நாட்டின் நலனுக்கும், முன்னேற்றத்திற்கும், தமிழ்க் கலாச்சாரத்தின் தனித்துவத்தைப் பாதுகாப்பதற்கும் ஊழல் மலிந்த, பிரிவினைவாத திமுகவை விரைவாக வீழ்த்துவது முக்கியமானது. அதனை நமது கூட்டணி செய்து முடிக்கும்"
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.