‘தமிழ்நாட்டில் கழிவுகள் கொட்டுவதை கேரளா நிறுத்திக் கொள்ள வேண்டும்’ - அண்ணாமலை எச்சரிக்கை!
தமிழகத்தில் கழிவுகள் கொட்டுவதை கேரளா நிறுத்த வேண்டும்; நிறுத்தாவிட்டால் கழிவுகளை லாரிகளில் ஏற்றி, கேரளாவில் கொண்டு சென்று கொட்டுவோம்; முதல் லாரியில் நானும் செல்வேன்' என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது;
காவிரி நீர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் உரிமைகளை தனது கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு விட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள மாநிலத்தின் எல்லையோர மாவட்டங்களான கன்னியாகுமரி, தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களை, கேரள கம்யூனிஸ்ட் அரசின் குப்பைக் கிடங்காக மாற்றவும் அனுமதித்திருக்கிறார்.
கேரள கம்யூனிஸ்ட் அரசுடன் திமுக அரசு உறவாடிக் கொண்டிருக்கும் அதே வேளையில், கேரள மாநிலத்தின் பயோமெடிக்கல், பிளாஸ்டிக் மற்றும் இறைச்சிக் கழிவுகளின் குப்பைக் கிடங்காக நமது தென்மாவட்டங்கள் மாற்றப்பட்டிருக்கின்றன. தினம் தினம் லாரிகளில் கொண்டு வந்து கொட்டப்படும் இந்தக் கழிவுகளைத் தடுத்து நிறுத்த வேண்டிய சோதனைச் சாவடிகள், வெறும் வசூல் மையங்களாக மட்டுமே மாறிவிட்டன. ஒருபுறம் தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து கேரள மாநிலத்துக்குச் சட்டவிரோதமாக கனிமங்கள் கடத்தப்படுவதைக் கண்டும் காணாததுபோல் இருக்கும் திமுக அரசு, மறுபுறம் தமிழகத்தை குப்பை கொட்டும் இடமாகப் பயன்படுத்திக்கொள்ள சுதந்திரமான அனுமதி அளித்துள்ளது.
அதிகாரிகளிடமும், முதலமைச்சர் தனிப்பிரிவுக்கும் பலமுறை புகார் அளித்தும், இதனைத் தடுத்து நிறுத்த எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. முழுக்க முழுக்க திமுக அரசுக்குத் தெரிந்தே இவை நடைபெறுகின்றன. உடனடியாக, கேரள மாநிலத்தின் குப்பைக் கிடங்காக தமிழக எல்லையோர மாவட்டங்கள் மாற்றப்படுவதைத் திமுக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இனியும் இதே போன்ற நிகழ்வுகள் தொடர்ந்தால், வரும் 2025 ஜனவரி முதல் வாரத்தில், பொதுமக்களைத் திரட்டி, இந்த உயிரியல் மருத்துவக் கழிவுகள் மற்றும் குப்பைகளை லாரிகளில் ஏற்றிச் சென்று, கேரளாவில் கொண்டு கொட்டுவோம். முதல் லாரியில் நானும் செல்வேன் என்பதைத் திமுக அரசுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.