கேரள ஆளுநர் முகமது ஆரிஃப் கானை போல, உரையை புறக்கணித்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி!
கேரளா ஆளுநர் ஆரிஃப் முஹமது கான் சட்டப்பேரவையில் உரையை படிக்காமல் புறக்கணித்ததை போல, இன்று தமிழ்நாடு ஆளுநர் ஆர். என்.ரவி உரையை படிக்காமல் புறக்கணித்தார்.
சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. சட்டப்பேரவைக்கு வந்த ஆளுநர் ரவியை, பேரவை தலைவர் அப்பாவு, துணை தலைவர் பிச்சாண்டி மற்றும் பேரவை செயலர் சீனிவாசன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து தமிழில் வணக்கம் சொல்லி ஆளுநர் ரவி உரையை தொடங்கினார். ஆனால், சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசின் உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி படிக்கவில்லை.
இதையும் படியுங்கள் ; கூட்டுறவு நிறுவனங்களில் ரூ.5 லட்சம் வரை கல்விக்கடன் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
அப்போது சட்டப்பேரவை கூட்டத்தின் தொடக்கத்திலும், இறுதியிலும் தேசிய கீதம் பாட வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம் சாட்டினார். உரையில் உள்ள பல அம்சங்களில் முரண்படுவதாக தெரிவித்த அவர், வாழ்க தமிழ்நாடு, வாழ்க பாரதம், ஜெய் பாரத் என கூறி 2 நிமிடங்களிலே தனது உரையை முடித்துக் கொண்டார். ஆளுநர் படிக்காத உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு முழுமையாக வாசித்தார்.
முன்னதாக, கடந்த 25 ஆம் தேதி கேரள சட்டப்பேரவையில் அந்த மாநில ஆளுநர் முகமது ஆரிஃப் கான், மாநில அரசு தயாரித்த உரையை படிக்காமல், கடைசி பத்தியை மட்டும் 2 நிமிடங்களில் படித்துவிட்டு அமர்ந்தார்.
இதேபோல், தமிழ்நாடு ஆளுநரும் மாநில அரசின் கொள்கை உரையை இன்று புறக்கணித்தது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.