கேரள சிறுமி கடத்தப்பட்ட விவகாரம் - 3 பேர் கைது..!
கேரள மாநிலத்தில் 6 வயது சிறுமியை கடத்திய கும்பலை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், ஓயூரைச் சேர்ந்தவர் 6 வயது சிறுமி சாரா ரிஷி. இவர் தனது அண்ணன் ஜோனாதனுடன் டியூஷனுக்குச் சென்று கொண்டிருந்த பொழுது காரில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பலால் கடத்தப்பட்டார். பின்னர், அந்த மர்ம கும்பல் தொலைபேசி மூலம், சாராவின் பெற்றோரை அழைத்து ரூ.10 லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல் துறையில் புகார் அளித்தனர்.
இதையும் படியுங்கள்: “மன்சூர் அலி கான் மீது நடவடிக்கை வேண்டாம்” – காவல்துறை விளக்கம் கேட்ட நிலையில் த்ரிஷா பதில்!
இந்நிலையில் திருவனந்தபுரம், கொல்லம் மற்றும் பத்தனம்திட்டா மாவட்ட எல்லைப் பகுதிகளில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வந்தனர். மேலும், திருவனந்தபுரத்தில் பல்வேறு இடங்களில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். கடத்தப்பட்ட குழந்தை குறித்த பதற்றம் அதிகரித்ததையடுத்து, விசாரணையை தீவிரப்படுத்த மாநில காவல்துறைக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவிட்டார். விசாரணை தீவிரமானதை தொடர்ந்து, அந்த மர்ம கும்பல் குழந்தையை கொல்லம் ஆசிரமம் அருகே விட்டுவிட்டு தப்பி ஓடியது.
இதனிடையே போலீசார் குற்றவாளிகளை தொடர்ந்து தேடி வந்தனர். இந்த நிலையில் தென்காசி மாவட்டம் புளியரை பகுதியில் பதுங்கி இருந்த 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய இரு வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். குற்றவாளிகளை கொல்லம் தனிப்படை போலீசார் காவலில் எடுத்து கொல்லம் அழைத்து சென்று விசாரணை நடத்த உள்ளனர்.