"ஒவ்வொரு வீராங்கனைக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்" - குடியரசு தலைவர் திரௌபதி முர்மு!
மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நவி மும்பையில் நடைபெற்றது. இதில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 298 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 299 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 45.3 ஓவர்களில் 246 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
இந்நிலையில் பட்டம் பெற்ற இந்திய அணிக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "2025 ஆம் ஆண்டு ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் ஒவ்வொரு வீராங்கனைக்கும் எனது மனமார்ந்தவாழ்த்துக்கள்! அவர்கள் முதல் முறையாக அதை வென்று வரலாறு படைத்துள்ளனர்.
இன்று அவர்களின் திறமைக்கும் செயல்திறனுக்கும் ஏற்ற பலனைப் பெற்றுள்ளனர். இந்த தருணம் பெண்கள் கிரிக்கெட்டை இன்னும் உயர்ந்த இடத்துக்கு அழைத்துச் செல்லும்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.