அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகாத கெஜ்ரிவால்!
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று விசாரணைக்கு ஆஜராக முடியாது என்று அமலாக்கத்துறைக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
டெல்லி மாநில அரசின் மதுபான கொள்கை குற்றச்சாட்டு வழக்கில் துணை முதல்வர் மனீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் உள்ளிட்டோர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, மதுபான கொள்கை வழக்கில் விசாரணைக்கு ஆஜராகக் கோரி முதல்வா் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை திங்கள்கிழமை நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இந்த நிலையில், மத்தியப் பிரதேச மாநிலத்தில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளதால், அமலாக்கத்துறையின் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
இதுகுறித்து அமலாக்கத்துறைக்கு கடிதம் எழுதியுள்ள கெஜ்ரிவால், “அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன் தெளிவில்லாமல் இருக்கிறது. 5 மாநில தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதால், அமலாக்கத்துறையின் விசாரணைக்கு இன்று ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். விசாரணைக்கு ஆஜராக வேறு தேதி ஒதுக்க வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இதே வழக்கில் கடந்த ஏப்ரல் மாதம் மத்திய புலனாய்வு அமைப்பு (சி.பி.ஐ.) முதல்வா் கெஜ்ரிவாலை அழைத்து விசாரணை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.