குஜராத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட உள்ள ஜே.பி.நட்டா! பாஜகவின் அடுத்த தேசிய தலைவர் யார்?
குஜராத்திலிருந்து ஜே.பி.நட்டா மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட உள்ள நிலையில், கட்சி விதியின் படி பாஜக தேசிய தலைவர் பொறுப்பிலிருந்து அவர் விடுவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
56 மாநிலங்களவை இடங்களுக்கான தோ்தல் வரும் பிப். 27-ஆம் தேதி 15 மாநிலங்களில் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய நாளை(பிப்.15) கடைசி நாளாகும். இந்த நிலையில், மாநிலங்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் குஜராத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவும், மகாராஷ்டிரத்தில் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த அசோக் சவாணும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிரத்தின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் சவாண், காங்கிரஸில் இருந்து விலகி நேற்று பாஜகவில் இணைந்த நிலையில், மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். முன்னதாக மத்திய பிரதேச மாநிலங்களவை வேட்பாளராக மத்திய இணையமைச்சர் எல்.முருகனும், ஒடிஸா மாநில வேட்பாளராக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ்வும் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பாஜக தேசிய தலைவர் பதவி வகித்து வந்த ஜே.பி.நட்டா, குஜராத் மாநிலங்களவை எம்பியாக தேர்வு செய்யப்பட உள்ளதால், பாஜக தேசிய தலைவர் பொறுப்பில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாஜகவின் அடுத்த தேசிய தலைவருக்கான போட்டியில் மஹாராஷ்டிரா மாநில துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், உத்திரப்பிரதேச மாநிலத்தின் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திரா பிரதான் மற்றும் மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் ஆகியோர் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், கூடிய விரைவில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் புதிய தலைவர் தேர்வு செய்யப்பட்டு, அறிவிக்கப்பட உள்ளார். ஏற்கனவே பொறுப்பில் இருக்கும் ஒருவர், கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்க கூடாது எனும் கட்சியின் அடிப்படை விதிகளின் வழியில், தற்போதய தலைவர் நட்டா தலைவர் பதவியில் இருந்து விலக உள்ளார் என கூறப்படுகிறது.