"டெல்லியிருந்து ஜம்மு-காஷ்மீர் ஆளப்படுகிறது" - #RahulGandhi கண்டனம்!
டெல்லியிருந்து ஜம்மு-காஷ்மீர் ஆளப்படுகிறது என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
யூனியன் பிரதேசமான ஜம்மு-காஷ்மீரில் மொத்தமுள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு, 10 ஆண்டுகளுக்கு பின் 3 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் முதல் கட்ட வாக்குப் பதிவு நேற்று 24 தொகுதிகளில் நடைபெற்றது. இத்தொகுதிகளில் 219 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதன்படி, ஜம்மு காஷ்மீரில் முதற்கட்ட தேர்தல் கடந்த 18ம் தேதி நடைபெற்றது.
இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ், மக்கள் ஜனநாயக கட்சி, தேசிய மாநாடு கட்சி ஆகியவை போட்டியிடுகின்றன. காங்கிரஸும், தேசிய மாநாடு கட்சியும் கூட்டணியாக போட்டியிடுகின்றன. இந்நிலையில், இரண்டாம் கட்டமாக 26 தொகுதிகளுக்கு செப். 25-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், இத்தொகுதிகளில் நேற்றுடன் பிரசாரம் நிறைவடைந்தது. இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டம், சுரான்கோட் பகுதியில் காங்கிரஸ் தேசிய மாநாடு கட்சி கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நேற்று நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசினார்.
இதையும் படியுங்கள் : “ஹரியானாவின் புதல்வனான என்னை பாஜக துன்புறுத்தியது” – #ArvindKejriwal
அப்போது பேசிய அவர் கூறியதாவது ;
" மாநிலமாக இருந்த ஜம்மு-காஷ்மீர், யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது. நாட்டின் வரலாற்றிலேயே ஒரு மாநிலம், யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது இதுவே முதல் முறை. மக்களின் ஜனநாயக உரிமை பறிக்கப்பட்டது. சட்டப் பேரவைத் தேர்தலுக்குப் பிறகு ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை அளிக்க மத்திய அரசு தவறினால் மாநில அந்தஸ்தை வழங்குமாறு காங்கிரஸ் அழுத்தம் கொடுக்கும். தற்போது டெல்லியில் இருந்து ஜம்மு-காஷ்மீர் ஆளப்படுகிறது. மக்களை மதம், சாதி, இனம் மற்றும் பிராந்திய அடிப்படையில் பிரிப்பதற்காக ஆர்எஸ்எஸ் அமைப்பும் பாஜகவும் வெறுப்பைப் பரப்பி வருகின்றன. வெறுப்புச் சந்தையில் அவற்றை எதிர்ப்பதற்காக காங்கிரஸ் கட்சி அன்புக்கான கடைகளைத் திறந்துள்ளது"
இவ்வாறு அவர் பேசினார்.
மூன்றாம் கட்டமாக 40 தொகுதிகளுக்கு அக். 1-ம் தேதியும் தேர்தல் நடத்தப்படவுள்ளது. அக். 8-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.