ஜம்மு - காஷ்மீர் 2வது கட்ட தேர்தல்: வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்த #PMModi!
ஜம்மு - காஷ்மீர் 2வது கட்ட தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், வாக்காளர் அனைவரும் வாக்களித்து ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்ற வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
90 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட ஜம்மு-காஷ்மீரில் மூன்று கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதில், முதல்கட்டமாக கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 61.38 சதவீத வாக்குகள் பதிவானது.
இந்த நிலையில், இன்று (செப்.25) இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. மொத்தம் 26 தொகுதிகளுக்கு நடைபெறும் இந்த வாக்குப்பதிவில் 239 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மேலும், 23 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் இதில் வாக்களிக்க உள்ளனர்.
இதையும் படியுங்கள் : தமிழ்நாட்டின் திட்டங்களுக்கான நிதி கோரி நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் #MKStalin!
ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல் குறித்து பிரதமர் நரேந்திரமோடி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஜம்மு-காஷ்மீரில் சட்டமன்றத் தேர்தலுக்கான 2ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. வாக்காளர் அனைவரும் வாக்களித்து ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்தத் தருணத்தில், முதன்முறையாக வாக்களிக்கப் போகும் அனைத்து இளைஞர்களுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.”
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.