#JKAssemblyElections | முதற்கட்ட தேர்தலில் 61.11% வாக்குகள் பதிவு!
ஜம்மு & காஷ்மீர் நேற்று 24 தொகுதிகளில் நடைபெற்ற முதற்கட்ட வாக்குப்பதிவில் 61.11% வாக்குகள் பதிவானதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
யூனியன் பிரதேசமான ஜம்மு-காஷ்மீரில் மொத்தமுள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு, 10 ஆண்டுகளுக்கு பின் 3 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது.ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் முதல் கட்ட வாக்குப் பதிவு நேற்று 24 தொகுதிகளில் நடைபெற்றது. இத்தொகுதிகளில் 219 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஜம்மு காஷ்மீரில் நேற்று நடைபெற்ற முதல் கட்ட தேர்தலில் காலை முதலே வாக்காளர்கள் மிக நீண்ட வரிசைகளில் நின்று வாக்களித்தனர்.
இது ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு பின் நடக்கும் முதல் தேர்தலாகும். இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ், மக்கள் ஜனநாயக கட்சி, தேசிய மாநாடு கட்சி ஆகியவை போட்டியிடுகின்றன. காங்கிரஸும், தேசிய மாநாடு கட்சியும் கூட்டணியாக போட்டியிடுகின்றன.
இதையும் படியுங்கள் :AFGvSA | முதலாவது ஒருநாள் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது #Afghanistan
இந்நிலையில், 24 தொகுதிகளில் நடைபெற்ற முதற்கட்ட வாக்குப்பதிவில் 61.11% வாக்குகள் பதிவானதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக, கிஷ்ட்வார் மாவட்டத்தில் மிக அதிகபட்சமாக 80.14% வாக்குகளும் குறைந்தபட்சமாக புல்வாமாவில் 46.65% வாக்குகளும் பதிவாகி உள்ளன. இதையடுத்து, இரண்டாம் கட்டமாக 26 தொகுதிகளுக்கு செப். 25-ம் தேதியும், மூன்றாம் கட்டமாக 40 தொகுதிகளுக்கு அக். 1-ம் தேதியும் தேர்தல் நடத்தப்படவுள்ளது. அக். 8-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.