“திமுக கூட்டணியை தோற்கடிப்பது எளிதல்ல...” மூத்த பத்திரிகையாளரின் பதிவு இணையத்தில் வைரல்!
தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணியை தோற்கடிப்பது எளிதல்ல என்று மூத்த பத்திரிகையாளரும், பிரபல ஆங்கில ஊடக குழுமமான இந்தியா டுடேவின் கன்சல்டிங் எட்டிடராருமான ராஜ்தீப் சர்தேசாய் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் மூத்த பத்திரிக்கையாளரான ராஜ்தீப் சர்தேசாய், மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் மேற்கொள்ளும் பரப்புரை குறித்து தகவல்களை சேகரித்தும், அரசியல் தலைவர்களை சந்தித்து பேட்டி கண்டும், தேர்தல் களத்தை ஆராய்ந்து வந்தார்.
இந்நிலையில், தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் தேர்தல் களம் குறித்து அவர் தனது X தள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது :
“தமிழ்நாட்டின் சாலைகளில் பயணித்து தொகுதிகளை மதிப்பிடுவதற்கு மூன்று நாட்கள் மிகக் குறைவு. ஆனால், பரந்துபட்டு வேரூன்றியுள்ள திமுக தலைமையிலான கூட்டணியைத் தோற்கடிப்பது எளிதானதன்று. அது தனித்துவம் மிக்க சாதகமான தன்மையைக் கொண்டுள்ளது.
ஆனால், இங்கே நான் எடுத்துச் சொல்ல மிகப்பெரிய செய்தி ஒன்று இருக்கிறது. குஜராத் மாடலைப் பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். சமூகநீதி மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டைக் கொண்ட தமிழ்நாடு மாடலை நாம் எப்போது அங்கீகரிக்கப் போகிறோம்?
இதோ ஒரு புள்ளி விவரம் : இந்தியா முழுவதிலும் உள்ள தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களில் 43% பேர் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? பல பத்து ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட ஒரு நம்பமுடியாத சாதனை இது. அதிகாரம் பெற்ற பெண்கள், சிறந்த தமிழ்நாடு மற்றும் இந்தியாவை உருவாக்குகிறார்கள்!”
இவ்வாறு ராஜ்தீப் சர்தேசாய் பதிவிட்டுள்ளார். அவரது பதிவுக்கு கலவையான விமர்சனங்கள் எழுந்து வருகிறது.