அனைத்துக் கட்சி கூட்டத்தில் திமுக வலியுறுத்தியது என்ன? - டி.ஆர்.பாலு பேட்டி!
இஸ்லாமியர்களை பாதிக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என அனைத்து கட்சி கூட்டத்தில் திமுக வலியுறுத்தியது.
மக்களவை தேர்தலுக்கான தேதி மார்ச் மாதம் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் நாடாளுமன்றத்தின் இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31-ந் தேதி தொடங்கும் என மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது.
இதையும் படியுங்கள் ; “2027-ம் ஆண்டில் உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும்” – மத்திய நிதியமைச்சகம்!
இந்த கூட்டத் தொடர் தற்போதைய 17-வது மக்களவையின் இறுதி கூட்டத் தொடராகும். மேலும் நடப்பு ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் ஜனவரி 31-ந் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரைக்கு பின்னர் கூட்டத்தொடர் தொடங்கும். இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 1-ந் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்கிறார். இக்கூட்டத் தொடர் பிப்ரவரி 9-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த நிலையில் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாடாளுமன்றத்தை சுமுகமாக நடத்துவது உள்ளிட்ட முக்கியமான விசயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.
நாடாளுமன்ற அனைத்து கட்சி கூட்டத்திற்கு பின்னர் டி.ஆர்.பாலு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அனைத்து கட்சி கூட்டத்தில் திமுக சார்பாக முன்வைக்கப்பட்ட விவகாரங்கள் தொடர்பாக விளக்கம் அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
"தமிழ்நாட்டில் அரசியல் சட்டத்திற்கு எதிராக செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஆளுநர் தொடர்பாக இந்த கூட்டத்தொடரில் விவாதிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது. திமுக சார்பில் இந்த கூட்டத் தொடரில் என்னென்ன விஷயங்கள் விவாதிக்க வேண்டும் என விரிவாக எடுத்து வைக்கப்பட்டது. இஸ்லாமியர்களை பாதிக்கும் குடியுரிமை சட்டம் நீக்கப்பட வேண்டும். இது குறித்து விவாதிக்க வேண்டும். ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து விரிவாக விவாதிக்க வேண்டும். மேலும், மதுரை AIIMS அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படாதது தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டோம்".
இவ்வாறு திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்தார்.